சுதந்திரம் என்பது எவ்வித தடையுமற்று சுயேட்சையாக செயற்படுவதற்குரிய உரிமையைக் குறிக்கிறது. லிபர்(Liber) என்ற இலத்தீன் மொழி சொல்லிலிருந்தே சுதந்திரம்(Liberty) என்ற சொல் உருவானது. லிபர் என்ற சொல்லின் பொருள் "எவ்விதக் கட்டுப்பாடுமின்றி" என்பதாகும். சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளரான ஹொப்ஸ்(Hobbes) இதுபற்றி கூறுகையில் எவ்வித கட்டுப்பாடுமின்றி இருப்பதே சுதந்திரம் என்றார். இச்சுதந்திரத்தின் மூலமே மனிதன் தனது வாழ்வினை முன்னேற்றம் அடைந்ததாகவும் சிறப்பானதாகவும் ஆக்கிக் கொள்கிறான். அவற்றுக்கான வாய்ப்புக்களையும் நம்பிக்கைகளையும் பெற்றுக் கொள்கிறான். மக்களின் சுதந்திரம் பறிக்கப்படும் போது அவையே சுதந்திரப்போராட்டங்களாகவும் வெளி வந்துள்ளன.
வெளித்தடைகளற்ற விதத்தில் மனிதன் தனது தனித்துவத்தை விருத்தி செய்து கொள்வதற்கான நிலைமையே சுதந்திரமாகும். சுதந்திரமானது குடியியல் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், சமுதாய சுதந்திரம், தேசிய சுதந்திரம், இயற்கை சுதந்திரம் என ஆறாக வகைபடுத்தப்படும். சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு நவீன அரசுகள் கையாளும் வழிமுறைகளாக, சட்டவாட்சியை நடைமுறைப்படுத்தல், அதிகார வேறாக்கத்தை பின்பற்றல், சுதந்திர நீதித்துறையை உருவாக்கல், அரசு மதசார்பற்றதாக இருத்தல், சிறந்த கட்சிமுறை, ஒரே சட்டமுறை இருத்தல் என்பனவாகும்.
தற்கால தாராண்மை ஜனநாயக வாதிகள் வரையறைகளையும் நிபந்தனைகளையும் கொண்ட சுதந்திரத்தையே வலியுறுத்துகின்றனர். பொதுவாக சமூகத்தில் சகலருக்கும் குறைந்தபட்ச சுதந்திரத்தையாவது பெற்றுக் கொடுக்க வேண்டுமாயின் சுதந்திரம் ஓரளவிற்காவது வரையறுக்கப்பட வேண்டும். அவ்வரையறைகளை விதிக்கும் அதிகாரம் அரசுக்கே இருத்தல் அவசியம். இவ்வகையில் அரசின் அதிகாரமும் சுதந்திரமும் நெருங்கிய தொடர்புடையவை ஆகும். அரசின் சட்டங்கள் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அடிப்படையாக அமைகின்றன.
ஒருசாராரின் உரிமைகள் ஏனையோரின் விருப்பில் தங்கியிருப்பின் அங்கு சுதந்திரம் நிலவாது. சுதந்திரத்துக்கும் உரிமைகள் அவசியமாகும். சலுகைகள் இருப்பின் சுதந்திரம் இருக்காது. சுதந்திரத்தை பாதுகாக்க அரசு அவசியமான ஒன்றாகும். சுதந்திரம் பெறுமதி மிக்கதாகும். காலத்துக்கு காலம் சுதந்திரத்தின் அர்த்தம் மாறி வருகிறது. ஒவ்வொரு தனிப்பட்டவரின் சுதந்திரம் கட்டாயமாக மற்றவர்களது சுதந்திரத்தோடு தொடர்புபட்டதாகும். சுதந்திரம் பங்குபோடக்கூடிய ஒன்றாகும். சமூகத்தில் சுதந்திரத்தை அனுபவிக்க வசதி ஏற்படுத்திக் கொடுப்பது அரசேயாகும்.