இலங்கையில் திண்மக் கழிவுப் பொருட்கள் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளன. இதற்கு இலங்கை வளர்முக நாடாக இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். ஏனெனில் வளர்முக நாடுகளில் நகராக்கலும் அது தொடர்பான சமூக, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளும் தொடர்ந்தும் இடம்பெற்று வரும். அதன் போது திண்மக் கழிவுப் பொருட்கள் பெருக்கமடையும். அது இயல்பானது. ஆனால் இக்ககழிவுப் பொருட்களை முறையாகக் கையாண்டு தொடராக முகாமைத்துவம் செய்ய வேண்டும். அதனைச் செய்யத் தவறுவதன் விளைவாகவே திண்மக் கழிவுகள் பிரச்சினையாக விளங்குகின்றன.
அதேநேரம், பெரும்பாலான வளர்முக நாடுகளைப் போன்று இலங்கை மக்கள் மத்தியிலும் திண்மக் கழிவுப் பொருட்கள் தொடர்பில் போதிய தெளிவும் விழிப்புணர்வும் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. இவற்றின் விளைவாகவே இக்கழிவுப் பொருட்கள் கண்டகண்ட இடங்களில் கொட்டப்படுகின்றன. அவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூட கவனம் செலுத்தப்படாதுள்ளது. இதனால் இக்கழிவுப் பொருட்கள் சேரும் இடங்களில் கட்டாக்காலி நாய்கள், எலிகள் , இலையான் மற்றும் நுண்ணுயிர்கள் என்பவற்றின் பெருக்கத்தை பரவலாக அவதானிக்க முடிகின்றது. இவற்றினூடாக ஆரோக்கிய ரீதியிலான பலவித பாதிப்புகளும் உருவாகின்றன.
மீதொடமுல்ல குப்பைமேடு 2017 ஏப்ரலில் சரிவுக்குள்ளாகி 20 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு பலர் காயங்களுக்கும் உள்ளானதைத் தொடர்ந்து கழிவுப்பொருட்கள் பிரச்சினை நாட்டின் எல்லா மட்டங்களினதும் அவதானத்தைப் பெற்றது.கொழும்பில் சேர்கின்ற திண்மக் கழிவுப் பொருட்களை முதலில் வத்தளைக்கும் அதன் பின்னர் பிலியந்தலைக்கும் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் மக்கள் எதிர்ப்பு காரணமாக அத்திட்டங்கள் கைவிடப்பட்டன.
இவ்வாறான சூழலில் கடந்த ஆட்சிக் காலத்தில் திண்மக் கழிவுப் பொருட்கள் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த அறுவைக்காட்டிலுள்ள சிமெந்து மணல் அகழ்வுக் குழிகளை கொழும்பு கழிவுப்பொருட்களை கொண்டு நிரப்பும் திட்டம் 2017 பிற்பகுதியில் மீண்டும் தூசு தட்டி எடுக்கப்பட்டது.
ஆனால் கொழும்பில் சேருகின்ற கழிவுகள் சுமார் 170 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள அறுவைக்காட்டு பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு பிரதேசவாசிகள் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இருப்பினும் அரசாங்கம் இத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தது.
திண்மக் கழிவுப்பொருட்கள் என்பது தனியே கொழும்புக்கு மாத்திரமுரிய பிரச்சினை அல்ல. மாறாக நாட்டில் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு நகரமும் இப்பிரச்சினைக்கு முகம் கொடுத்த வண்ணமுள்ளன. அதனால் ஒரு இடத்தில் சேர்கின்ற திண்மக் கழிவுகளை மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்று கொட்டுவதன் ஊடாக இக்கழிவுப் பொருட்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடப் போவதுமில்லை.
மாறாக வீடுகளிலும் சுற்றாடல்களிலும் சேர்கின்ற இக்கழிவுப் பொருட்களை முறையாகக் கையாண்டு அவற்றை மீள்சுழற்சி செய்து முகாமைத்துவம் செய்யும் போதுதான் இப்பிரச்சினைக்கு நிலைபேறான தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம். அதனால் இக்கழிவுப் பொருட்கள் குறித்து- மக்கள் மத்தியில் போதிய தெளிவும் விளக்கமும் ஏற்படுத்தப்படுவது அவசியம்.
இவ்வாறு இலங்கை திண்மக் கழிவுப் பொருட்கள் பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் பிரித்தானியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட திண்மக் கழிவுப் பொருட்கள் அடங்கிய 98 கொள்கலன்களை இலங்கை சுங்க அதிகாரிகள் ஜுலை மாதம் 8ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் கண்டுபிடித்துள்ளனர். இது இலங்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொள்கலன்களில் பாவனைக்குதவாத அப்புறப்படுத்தப்பட்ட மெத்தைகள், காபட்கள், பிளாஸ்டிக்குகள், பொலித்தீன், குடம்பிகள்,இறந்த செடிகள், பறவைகளின் இறகுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுப் பொருட்கள் காணப்பட்டுள்ளன.
இக்கொள்கலன்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள சுங்கத் திணைக்களப் பேச்சாளர் லால் வீரக்கோன், 'இக்கொள்கலன்களில் பரிசோதிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும், புழுக்கள் நிறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.'இவற்றில் வைத்தியசாலைக் கழிவுகளும் காணப்படுகின்றன. மீள்சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத வெளிநாட்டு கழிவுப் ெபாருட்கள் இவ்வாறு நாட்டுக்குள் நீண்ட காலமாக இரகசியமான முறையில் கொண்டு வரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் ஊடாக வெளிநாடுகளிலிருந்து கழிவுப்பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. ஏனெனில் இலங்கையின் சட்டத்திட்டங்களுக்கு அமைய வெளிநாடுகளிலிருந்து திண்மக் கழிவுப்பொருட்களை இந்நாட்டுக்குள் தருவிக்க முடியாது. 2013 ஜூலை 13ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியொன்றை முறையற்ற வகையில் பயன்படுத்தித்தான் பிரித்தானியாவிலிருந்து இக்கொள்கலன்கள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
முதலீட்டுச் சபையின் கீழுள்ள நிறுவனமொன்றில் மீள்சுழற்சி செய்வதற்காக இக்கழிவுப்பொருட்கள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவை மீள்சுழற்சி செய்யப்படவில்லை என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இக்கழிவுப்பொருட்கள் அடங்கிய சகல கொள்கலன்களையும் பிரித்தானியாவுக்கே திருப்பி அனுப்புவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ள அதேநேரம், இக்கொள்கலன்களை தருவித்த உள்நாட்டு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட உள்ளது.
இலங்கைக்கு உள்நாட்டு கழிவுப்பொருட்களே பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் சூழலில் வெளிநாட்டு கழிவுப்பொருட்களையும் இங்கு கொண்டுவருவதால் இங்குள்ள திண்மக் கழிவுப் பொருட்கள் பிரச்சினை மென்மேலும் அதிகரிக்குமேயொழிய குறையப் போவதில்லை. அத்தோடு புதுப்புது நோய்களும் பாதிப்புகளும் தோற்றம் பெறவே செய்யும்.
ஆகவே உள்நாட்டு திண்மக் கழிவுப் பொருட்கள் எவரையும் பாதிக்காத வகையில் அவற்றை முறையாகக் கையாள வேண்டும்.வெளிநாட்டு கழிவுப்பொருட்கள் எந்தவகையிலும் நாட்டுக்குள் வராத வகையில் கட்டுப்படுத்தவும் வேண்டும்.