இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்ட பயிர் செய்கைக்காக தென்னிந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்டு, இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களே மலையக மக்கள் என அழைக்ஙப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் கூழித்தொழிலுக்காக அழைத்துவரப்பட்டவர்களே. இவ்வாறு வந்த மக்கள் தங்களது உடைமைகளுடன் உறவுகளுடன் அங்கு பேணி பாதுகாத்து வந்த கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களையும் சுமந்து வந்தனர்.
ஆங்கிலேயரின் ஆட்சியின் போது காணப்பட்ட அடக்கு முறையாலும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்மையாலும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட இவர்கள் அவ்வப்போது அந்த கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களையும் மீட்டிப்பார்த்தனர். அவ்வாறு மீட்டியவையே இன்றும் புழக்கத்தில் உள்ள கூத்துக்களும் சடங்குமுறைகளும். அன்று ஆறு மணி ஆகிவிட்டால் எல்லா வீடுகளிலும் புராண கதைகளும், கூத்து பாடல்களும் முழங்கிக் கொண்டிருக்குமாம். இவைகள் எம் மக்களுக்கு இன்பத்தையும் மன அமைதியையும் அள்ளித்தந்தது. மலையகத்தில் எமது முன்னோர்கள் எமக்கு அளித்த கலைகள் பல உள்ளன. அவையாவன பொன்னர் சங்கர் கூத்து, காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு, நல்ல தங்கால் கதை வீரபத்திரன் ஆட்டம், காட்டேரியம்மன், லவ குசா என்பன.
காட்டேரியம்மன்
அன்றைய கால மனிதன் இயற்கை கூறுகளால் வரும் பாதிப்புக்களை தடுப்பதற்க்காக நீர், நெருப்பு, மரம், கல் என இயற்க்கையுடன் சார்ந்தவைகளை கடவுளாக எண்ணி வழிபட்டான். அவ்வாறு மழையை வேண்டியும் மழையினால் வரும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த வேண்டியும் மாரியம்மனை வழிபட்டனர். இவ் மாரியம்மனின் அவதாரங்களில் ஒன்றுதான் இந்த கரிய நிற தோற்றமுடைய காட்டேரியம்மன்.
இலங்கை திருநாட்டில் இயற்க்கை எழில் மிகு நுவரெலியா மாவட்டத்தில் தேயிலை மலைகளும் கலை கலாச்சாரமும் கலந்த அழகிய கிராமம் தான் லிந்துல சென்றகுலர்ஸ் தோட்டம். மலையகத்தின் தனித்துவம் மிக்க கலைகளான காமன் கூத்து, பொன்னர் சங்கர் கூத்து, காட்டேரியம்மன், குறவஞ்சி ஆட்டம், காவடி, கோலாட்டம் போன்றவை இவ்வூரில் இன்றும் உயிர்ப்புடன் இயங்குவதை காணலாம். இந்த வரிசையில் மிக முக்கியமான ஒன்றுதான் காட்டேரியம்மன் திருவிழா.
இந்தியாவில் இருந்து வருகை தந்த பெருந்திரளான கூழித்தொழிலாளர்களில் பெரம்பலூர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் லிந்துல சென்றகுலர்ஸ் தோட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர். இன்றும் இந்தியாவின் பெரம்பலூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களிலேயே இந்த காட்டேரியம்மன் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இலங்கையில் சென்றகுலர்ஸ் தோட்டத்தில் மாத்திரமே காட்டேரியம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வழிபாட்டு முறை
பங்குனி மாதம் என்றாலே அது திருவிழா மாதம் தான் எல்லா ஊர்களிலும் 5 நாள் 7 நாள் என குதூகலமாக இருக்கும். கொடிமரம் நட்டு, கரகம் பாலித்து, பாற்குட பவணி, உள்ளூர் வளம், வெளியூர் வளம், மஞ்சள் நீராட்டு விழா என பயபக்தியாக காணப்படும். அதேதான் இந்த சென்றகுலர்ஸ் தோட்டத்திலும் திருவிழா காலம் ஆரம்பித்து விட்டால் போதும் சுற்றியுள்ள அத்தனை ஊருக்கும் இன்ப மழை தான். திருவிழா ஆரம்பத்தின் பின்னர் என்னவாக இருந்தாலும் சரி செவ்வாய்க்கிழமையை காட்டேரியம்மனுக்காக ஒதுக்கி விடுவர். ஆம் பங்குனி மாதம் திருவிழா ஆரம்பித்து செவ்வாய்கிழமை தான் காட்டேரியம்மன் திருவிழா நடைபெறும்.
திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு காட்டேரியம்மன் வேடம் தரிப்பவர் பிறந்த மேனியுடன் சுடுகாட்டிற்கு செல்வார். அங்கு சென்று காட்டேரியம்மனுக்கு சூடம், தேசிக்காய், பால், முட்டை என்பவற்றை படையல் வைப்பார். படையல் வைத்து வழிபட்ட பின்னர் காட்டேரி வேடம் தரிப்பவருக்கு அருள் வரும். காட்டேரியம்மன் ஆற்கொண்ட பின்னர் அம்மன் தெரிவு செய்த இடத்திலிருந்து சுடுகாட்டு மண்ணை எடுத்துக்கொண்டு அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வந்து மண்ணை ஒழித்து வைப்பார். அதன் பின்பு குழுவில் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு இந்த மண்ணை பெற்று சலித்து காட்டேரியம்மனுக்கு வீட்டினுல் படைத்து வேடம் தரிப்பவரின் அணிகளனுடன் வைப்பார்.
பின்பு காட்டேரி வேடம் தரிப்பவர் வேடமணிந்து தயார் நிலைக்கு வருவார். அப்பொழுது கரிய நிறவுருவம்,கருமை நிற உடைகள்,வெளிதள்ளிய நாக்கு, ரத்தம் தோய்ந்த உதடுகள்,கோரைப்பற்க்கள், தலைவிரி கோலம், கையில் சுலகு,காலில் சதங்கை என காட்டேரி அச்சமூட்டும் தோற்றமளிப்பாள். அதேபோல் எதிரணியாகவும் அரக்கர்களாகவும் தயார் நிலையில் இருக்கும் ஒன்பது அல்லது பதினொரு பேர் கொண்ட குழுவினர் மிகவும் கருப்பாகவும், உடல் முழுவதும் கருப்பு நிற அரிதரம் பூசி, கருப்பு நிற கால்சட்டை அணிந்து, காலில் சதங்கை, தலையில் கருப்பு துண்டு கட்டி,கையில் உலக்கை ஏந்தியும் காட்சியளிப்பர்.
வீட்டினுள் காட்டேரி வேடம் தரித்தவர்க்கு படையல்கள் வைத்து சுடுகாட்டில் இருந்து எடுத்து வந்த மண் உணவாக கொடுக்கப்படும் அதனை சாப்பிட சாப்பிட காட்டேரியின் அருளும் கோபமும் உக்கிரமடையும். இதனை தொடர்ந்தே தனது விளையாட்டையும் ஆட்டத்தையும் ஆரம்பிப்பாள் காட்டேரித்தாய். காலை 11 மணியளவில் ரோதமுனி ஆலயத்தில் ஆரம்பமாகும் இந்நிகழ்வில் காட்டேரியம்மனோடு சேர்ந்து எதிரில் உள்ள உலக்கை ஏந்திய குழுவினரும் இசைக்கு ஏற்றாற் போல் ஆடுவர். இங்கு பிரதான இசைக்கருவியாக தப்பு பயன்படுத்தப்படுகின்றது. காட்டேரியம்மனானது உலக்கை ஏந்தி ஆடுபவர்களை துஸ்டர்களாக எண்ணி, அவர்களை விரட்டியடிப்பது தீமையை விலக்கி நன்மை பெருக்குவதாக அமைந்துள்ளது. மேலும் காட்டேரியம்மன் ஒரு உயரமான மலையில் வாழ்வதாகவும் அதனை இடிக்க துஸ்டர்கள் உலக்கையை காட்டுவதாகவும் அவர்களை விரட்டியடிக்கவே காட்டேரியம்மன் அவதரித்ததாகவும் ஊர் மக்கள் நம்புகின்றனர்.
மேலும் காட்டேரியம்மன் தப்பிசைக்கு ஏற்றவாறு சுலகை விசுக்கி விசுக்கி ஆடி வருவார். எதிரணியில் உலக்கை வைத்துள்ளஒருவர் " பச்சொலக்க " எனக்கூற அணியில் உள்ள ஏனையோர் " பாரமில்லை " என கோசமிடுவர். "பச்சொலக்க பாரமில்லை" என்ற கோசம் கேட்டவுடன் அம்மனுக்கு கோபம் உச்சமடையும். காட்டேரியம்மனை கட்டுப்பாட்டிற்க்குள் வைத்துக் கொள்வதற்க்காக இடுப்பில் துணி ஒன்றை கட்டி பின்னால் இருந்து இழுத்து இழுத்து விடுவர். மேலும் சுற்றியுள்ள பக்தர்கள் ஓஓ.....ஹாஹாஹா என கோசமிடுவர். சுமார் 3 மணித்தியால ஆட்டத்தின் பின்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்க்கு வருகை தந்து இறுதியாக கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுடன் இந் நிகழ்வு நிறைவு பெறுகிறது.
ஆரம்பக்காலத்தில் வருகைதந்த கருப்பண்ணன் கவுண்டர் முதல் மாயழகு புஷ்பராஜ் தலைமுறை வரை சுமார் 6 தலைமுறைகள் தொடர்ச்சியாக இன்று வரை இந்த நாடக பண்புடைய சடங்கை செய்து வருகின்றனர். ஊர் நன்மைக்காகவும், ஊரின் காவலுக்காகவும் மக்கள் நலம் வேண்டியும் இந் நிகழ்வு நடைபெறுவதாக சென்றகுலர்ஸ் தோட்டத்தை சேர்ந்த கலைஞர்களாகிய சுப்பிரமணியம் ராசு, நல்லு பெரியசாமி என்போர் தெரிவித்தனர்.
மேலும் காட்டேரியம்மனை கருப்பண்ணன் கவுண்டர் குடும்பத்தினர் குலதெய்வமாக வழிபட்டுள்ளனர். இந்நிகழ்வின் அரங்க வெளியாக தெரு வீதி பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பலர் நேர்த்தி இட்டு காட்டேரியம்மனை வழிபடுவர். இவ்வளவு காலமும் முறையாக பேணப்பட்டு நேர்த்தியாக செய்யப்பட்ட இந்த சடங்கு முறை எதிர்காலத்திலும் எந்த வித தொய்வும் இன்றி சீரும் சிறப்புமாக செயற்பட வேண்டும்.
ஒரு இனம் அழிக்கப்பட வேண்டும் என்றால் அந்த இனத்தை போர் ஆயுதங்கள் கொண்டு தாக்க வேண்டிய, அழிக்க வேண்டிய அவசியமில்லை அவர்களின் கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களை சீர்குலைத்தால் போதும் அந்த இனம் தானாக அழிந்து விடும். இவ்வாறு ஒருகாலமும் நடக்கக்கூடாது. எனவேதான் எமக்கு எமது கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களை பேணி பாதுகாக்க வேண்டிய தலையாய கடமை உள்ளது.