Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Tuesday, 20 October 2020

இலங்கையில் திண்மக்கழிவு பிரச்சினை


இலங்கையில் திண்மக் கழிவுப் பொருட்கள் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளன. இதற்கு இலங்கை வளர்முக நாடாக இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். ஏனெனில் வளர்முக நாடுகளில் நகராக்கலும் அது தொடர்பான சமூக, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளும் தொடர்ந்தும் இடம்பெற்று வரும். அதன் போது திண்மக் கழிவுப் பொருட்கள் பெருக்கமடையும். அது இயல்பானது. ஆனால் இக்ககழிவுப் பொருட்களை முறையாகக் கையாண்டு தொடராக முகாமைத்துவம் செய்ய வேண்டும். அதனைச் செய்யத் தவறுவதன் விளைவாகவே திண்மக் கழிவுகள் பிரச்சினையாக விளங்குகின்றன.


அதேநேரம், பெரும்பாலான வளர்முக நாடுகளைப் போன்று இலங்கை மக்கள் மத்தியிலும் திண்மக் கழிவுப் பொருட்கள் தொடர்பில் போதிய தெளிவும் விழிப்புணர்வும் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. இவற்றின் விளைவாகவே இக்கழிவுப் பொருட்கள் கண்டகண்ட இடங்களில் கொட்டப்படுகின்றன. அவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூட கவனம் செலுத்தப்படாதுள்ளது. இதனால் இக்கழிவுப் பொருட்கள் சேரும் இடங்களில் கட்டாக்காலி நாய்கள், எலிகள் , இலையான் மற்றும் நுண்ணுயிர்கள் என்பவற்றின் பெருக்கத்தை பரவலாக அவதானிக்க முடிகின்றது. இவற்றினூடாக ஆரோக்கிய ரீதியிலான பலவித பாதிப்புகளும் உருவாகின்றன.


மீதொடமுல்ல குப்பைமேடு 2017 ஏப்ரலில் சரிவுக்குள்ளாகி 20 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு பலர் காயங்களுக்கும் உள்ளானதைத் தொடர்ந்து கழிவுப்பொருட்கள் பிரச்சினை நாட்டின் எல்லா மட்டங்களினதும் அவதானத்தைப் பெற்றது.கொழும்பில் சேர்கின்ற திண்மக் கழிவுப் பொருட்களை முதலில் வத்தளைக்கும் அதன் பின்னர் பிலியந்தலைக்கும் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் மக்கள் எதிர்ப்பு காரணமாக அத்திட்டங்கள் கைவிடப்பட்டன.


இவ்வாறான சூழலில் கடந்த ஆட்சிக் காலத்தில் திண்மக் கழிவுப் பொருட்கள் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த அறுவைக்காட்டிலுள்ள சிமெந்து மணல் அகழ்வுக் குழிகளை கொழும்பு கழிவுப்பொருட்களை கொண்டு நிரப்பும் திட்டம் 2017 பிற்பகுதியில் மீண்டும் தூசு தட்டி எடுக்கப்பட்டது.


ஆனால் கொழும்பில் சேருகின்ற கழிவுகள் சுமார் 170 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள அறுவைக்காட்டு பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு பிரதேசவாசிகள் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இருப்பினும் அரசாங்கம் இத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தது.


திண்மக் கழிவுப்பொருட்கள் என்பது தனியே கொழும்புக்கு மாத்திரமுரிய பிரச்சினை அல்ல. மாறாக நாட்டில் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு நகரமும் இப்பிரச்சினைக்கு முகம் கொடுத்த வண்ணமுள்ளன. அதனால் ஒரு இடத்தில் சேர்கின்ற திண்மக் கழிவுகளை மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்று கொட்டுவதன் ஊடாக இக்கழிவுப் பொருட்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடப் போவதுமில்லை.


மாறாக வீடுகளிலும் சுற்றாடல்களிலும் சேர்கின்ற இக்கழிவுப் பொருட்களை முறையாகக் கையாண்டு அவற்றை மீள்சுழற்சி செய்து முகாமைத்துவம் செய்யும் போதுதான் இப்பிரச்சினைக்கு நிலைபேறான தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம். அதனால் இக்கழிவுப் பொருட்கள் குறித்து- மக்கள் மத்தியில் போதிய தெளிவும் விளக்கமும் ஏற்படுத்தப்படுவது அவசியம்.


இவ்வாறு இலங்கை திண்மக் கழிவுப் பொருட்கள் பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் பிரித்தானியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட திண்மக் கழிவுப் பொருட்கள் அடங்கிய 98 கொள்கலன்களை இலங்கை சுங்க அதிகாரிகள் ஜுலை மாதம் 8ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் கண்டுபிடித்துள்ளனர். இது இலங்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொள்கலன்களில் பாவனைக்குதவாத அப்புறப்படுத்தப்பட்ட மெத்தைகள், காபட்கள், பிளாஸ்டிக்குகள், பொலித்தீன், குடம்பிகள்,இறந்த செடிகள், பறவைகளின் இறகுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுப் பொருட்கள் காணப்பட்டுள்ளன.


இக்கொள்கலன்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள சுங்கத் திணைக்களப் பேச்சாளர் லால் வீரக்கோன், 'இக்கொள்கலன்களில் பரிசோதிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும், புழுக்கள் நிறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.'இவற்றில் வைத்தியசாலைக் கழிவுகளும் காணப்படுகின்றன. மீள்சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத வெளிநாட்டு கழிவுப் ​ெபாருட்கள் இவ்வாறு நாட்டுக்குள் நீண்ட காலமாக இரகசியமான முறையில் கொண்டு வரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


இதன் ஊடாக வெளிநாடுகளிலிருந்து கழிவுப்பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. ஏனெனில் இலங்கையின் சட்டத்திட்டங்களுக்கு அமைய வெளிநாடுகளிலிருந்து திண்மக் கழிவுப்பொருட்களை இந்நாட்டுக்குள் தருவிக்க முடியாது. 2013 ஜூலை 13ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியொன்றை முறையற்ற வகையில் பயன்படுத்தித்தான் பிரித்தானியாவிலிருந்து இக்கொள்கலன்கள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.


முதலீட்டுச் சபையின் கீழுள்ள நிறுவனமொன்றில் மீள்சுழற்சி செய்வதற்காக இக்கழிவுப்பொருட்கள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவை மீள்சுழற்சி செய்யப்படவில்லை என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இக்கழிவுப்பொருட்கள் அடங்கிய சகல கொள்கலன்களையும் பிரித்தானியாவுக்கே திருப்பி அனுப்புவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ள அதேநேரம், இக்கொள்கலன்களை தருவித்த உள்நாட்டு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட உள்ளது.


இலங்கைக்கு உள்நாட்டு கழிவுப்பொருட்களே பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் சூழலில் வெளிநாட்டு கழிவுப்பொருட்களையும் இங்கு கொண்டுவருவதால் இங்குள்ள திண்மக் கழிவுப் பொருட்கள் பிரச்சினை மென்மேலும் அதிகரிக்குமேயொழிய குறையப் போவதில்லை. அத்தோடு புதுப்புது நோய்களும் பாதிப்புகளும் தோற்றம் பெறவே செய்யும்.


ஆகவே உள்நாட்டு திண்மக் கழிவுப் பொருட்கள் எவரையும் பாதிக்காத வகையில் அவற்றை முறையாகக் கையாள வேண்டும்.வெளிநாட்டு கழிவுப்பொருட்கள் எந்தவகையிலும் நாட்டுக்குள் வராத வகையில் கட்டுப்படுத்தவும் வேண்டும்.

வறட்சியும் இலங்கையும்




எமது நாட்டில் மழை வீழ்ச்சி குறைவடைந் துள்ளதால் நாட்டிற்குத் தேவையான மழை கிடைக்கவில்லை. அத்துடன் நீர் நிலைகளின் நீர்மட்டமும் குறை ந்துள்ளது. வரண்ட காற்றும் வீசு வதனால் நாட்டின் தட்ப வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், வரட்சியான காலநிலையும் நிலவுகின்றது.


இலங்கையானது புவியியல் ரீதியாக மத்திய கோட்டிற்கு அண்மையிலும், வெப்பமான காலநிலை நிலவக்கூடிய பிரதேசத்திலும் அமைந்துள்ளது. அத்துடன் இலங்கையை அச்சுறுத்தும் அனர்த்தங்களில் ஒன்றாக வரட்சி மாறி வருகின்றது. காலநிலை மாற்றங்களும், மனித நடவடிக்கைகளும் இவ்வனர்த்தம் ஏற்படுவதற்கான காரணங்களாகும். இலங்கையில் நிலவும் இந்த வரட்சியான காலநிலையால் வரட்சி தொடர்பாக மக்களை விழிப்பணர்வூட்டுவது அத்தியவசியமாகின்றது.


இலங்கைக்கு மழை கிடைக்கின்ற பருவப் பெயர்ச்சி மழைக்காலங்களில் குறைந்த மழை வீழ்ச்சியின் காரணமாக தென்கிழக்கு, வட மத்திய, வடமேற்கு பிரதேசங்களிலே வரட்சி ஏற்பட காரணமாக இருக்கின்றது. வரட்சிக்கு வரை விலக்கணமாக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக 15 தினங்களுக்கு மழை கிடைக்கவில்லையாயின் அங்கு வரட்சி ஏற்படுவதாக கருது கின்றனர். சில நாடுகள் நாட்களைக் கொண்டும், வாரங்களைக் கொண்டும், மாதங்களைக் கொண்டும், வருட ங்களைக் கொண்டும் வரட்சியை வரையறை செய்கின்றன.


பொதுவாக இலங்கையில் பிராந்திய வரட்சி  3-4 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படு கின்றது. மிகவும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வரட்சி 10 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படு கின்றது. வரட்சி ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக குறைந்த மழைவீழ்ச்சி, காடழித்தல், சட்டத்திற்கு முரணான சூழலுக்குப் பொருந்தாத நிலப் பயன்படுத்துகை, திட்டமிடப் படாத பயிர்ச் செய்கைகள் என்பன காரணமாக அமைகின்றன.


வரட்சியானது பொருளாதாரம், சமூகம் சூழல் என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.


பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களாக விவசாய பயிர்கள் இறத்தல், அறுவடை குறைவடைதல், பயிர்ச் செய்கைக்கான நீரின் அளவு குறைதல், கைத்தொழில், சுற்றுலா நீர்மின் உற்பத்தி குறைதல், நிதி என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்து கின்றது.


சமூக பாதிப்புக்களாக மனஅழுத்தம், சத்தான உணவு குறைதல், மக்கள் உணவிலிருந்து பாதுகாப்பு குறைதல், கலாசார விழுமியங்கள் என்பவற்றில் வரட்சியின் தாக்கம் ஊடுருவுகின்றது. சூழலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளாக விலங்குகள், தாவரங்கள், மரம், செடி, கொடி இறத்தல், ஆறு, குளங்கள் வரண்டு போதல் மற்றும் மாசடைதல், குடிநீரின் அளவு குறைவடைவதோடு, நிலக்கீழ் நீர் மாசடைதல் அதன் தரம் குறைதல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.


வரட்சி ஏற்படும்போது வழமையாக விவசாயத்துறையே முதலில் அதிகம் பாதிக்கப்படுகின்றது. ஏனெனில் பயிர்கள் மண் பற்றியுள்ள நீரிலேயே தங்கியுள்ளது. இது வரட்சியின் காலம் அதிகரிக்கும் போது மண்ணின் ஈரத்தன்மை குறைந்து கொண்டு செல்லும். மேலும் அதிகரிக்கும்போது அது நிலக்கீழ் நீரிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.


அதுமட்டுமல்லாது இலங்கையானது தனக்கு தேவையான மின்சக்தியில் 75% நீரை பயன்படுத்தியே உற்பத்தி செய்கின்றது. இதனால் நாட்டின் மின்சாரத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முடியாமல் போவதுடன் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவும் அதிகரிக்கின்றது.


வரட்சி நிலவும் காலப் பகுதியில் விவசாய உற்பத்திகள் குறைவடைவது டன், உணவுப் பொருட்களின் விலையும் அப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவின மும் அதிகரிக்கும்.


இலங்கையில் மிகப் பெரிய அளவில் வரட்சி ஏற்பட்ட காலங்களாக 1935-1937,1947-1949, 1953-1956, 1974-1977, 1982, 1983, 1987,1989,2001,2004 ஆகிய ஆண்டுகளைக் குறிப்பிடலாம். இவ்வாண்டுகளில் 2001 ஆம் ஆண்டிலேயே மிகப் பெரிய வரட்சி அம்பாந்தோட்டை, மொனராகல, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, பதுளை, அம்பாறை ஆகிய ஏழு மாவட்டங்களில் ஏற்பட்டது. 2001ஆம் மற்றும் 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட வரட்சியினால் அதிகளவான மக்களும் பயிர்களும் பாதிப்படைந்துள்ளன.


2001 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வரட்சியினால் 370, 541 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் 104,399 ஹெக்டேயர் பயிர்களும் பாதிப்படைந்தன. இதன்போது நிவாரண சேவைகளுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்குமாக இலங்கை ரூபா 381,415,000 செலவிடப்பட்டது. இதேபோல் 2004 ஆம் ஆண்டு வரட்சியினால் 2,198,521 மக்கள் பாதிக்கப்பட்டதுடன் 47, 105 ஹெக்டேயர் பயிர் நிலங்களும் பாதிப்படைந்தன.


வரட்சியினால் குறைந்த அளவில் பாதிப்படையக் கூடிய மாவட்டங்களாக கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, காலி, முல்லைத்தீவு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களை குறிப்பிடலாம்.


இலங்கையிலே இரண்டு பருவப் பெயர்ச்சி மழைக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் பெருமளவு வரட்சியின் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இரண்டு பருவப் பெயர்ச்சி மழைக்கு இடைப்பட்ட காலங்களில் ஜனவரி-மார்ச், ஓகஸ்ட் - செப்டெம்பர் ஆகிய காலங்களிலேயே அதிகளவான வரட்சி ஏற்பட்டுள்ளது.


வரட்சியானது ஏனைய அனர்த் தங்களிலிருந்து வித்தியாசமாக இருப்பதுடன் நீண்ட காலத்துக்கு பரந்த அளவில் மக்களை துன்புறுத் துவதுடன் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி யிருக்கின்றது. வரட்சியானது மெதுவாக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து மாதம் அல்லது வருட கணக்கில் நீடித்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. வரட்சி ஏற்படுவதை முன்கூட்டியே அறிவது அல்லது அனுமானிப்பது கடினமானதாகும்.


வரட்சியினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்தல், ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்ற செயற்பாடுகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு இன்றியமையாததாக இருக்கின்றது.


வரட்சியை பல முறைகளில் பிரிக்கக் கூடியதாக இருந்தாலும் இலங்கைக்கு பொருந்தக் கூடியதாக மூன்று வகைகளாக பிரிக்கலாம்.


01. வானிலை வரட்சி: குறித்த பிரதேசத்திலே சாதாரணமாக கிடைக்கக்கூடிய மழை வீழ்ச்சியை பெறுகின்ற காலம்.


02. நீரியல் வரட்சி : திட்டமிட்ட முறைப்படி நீரை ரிபிசீ8 முடியாத காலம். இந்த காலத்திலே நிலக்கீழ் நீர் ஓட்டமானது சாதாரண நீர் மட்டத்தின் அளவை விட கீழ்மட்டத்தில் காணப்படும்.


03. விவசாய வரட்சி : மண்ணின் ஈரத்தன்மை அற்றுப் போவதால் பயிர்கள் இறத்தல்.


வரட்சியினால் ஏற்படும் சேதங்களை குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்

 1. வரட்சி ஏற்பட்டதன் பின் வரட்சி பற்றிய ஆய்வுகளில் ஈடுபடல்.

 2. மழைவீழ்ச்சி பற்றிய தொடர்ச்சியான அவதானிப்பு மூலம் அக்காலத்துக்குரிய நீர்த்தேவைகள் பற்றித் தேடுதல். 

3. நீர் வளத்தை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை பின்பற்றுதல். 

4. மழைநீர் சேகரிப்பு தாங்கி அறிமுகம் செய்தல். 

5. நிலப்பயன்பாட்டு முறையைத் திட்டமிடுதல். 

6. அரச, அரச சார்பற்று, தனியார்துறை மூலம் நிவாரண சேவைகளை ஒழுங்கு செய்தல். 

7. நீர் வளங்களை அதிகரித்தல்.

 8. மக்களை அறிவூட்டுதல். 

9. ஊட கங்களை தொடர்புபடுத்தல். 

10. விவசாய கிணறுகளை அமைத்தல் 

11. நீரை வீணாக்காது சிக்கனமாகப் பயன்படுத்தல். 

12. ஆறுகள், குளங்கள், நீர்நிலைகளை அசுத்தமாக்காது இருத்தல். 

13. மரங்களை நடுதல். 

14. நீரேந்து பிரதேசங்களை பாது காப்பதற்கு காடுகளை அழிக்காதிருத்தல். 

15. குழாய்க்கிணறுகளை பயன்படுத்தல் 

16. குறைவான நீரைப் பயன்படுத்தக் கூடிய பயிர்களை நடல்.

மழை தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் பெய்யாதிருத்தல், வெப்பம் அதிகரித்தல், பிரகாசமான சூரிய வெளிச்சம், சேற்றுப் பிரதேசங்களில் வெடிப்புகள் ஏற்படல், நிலக்கீழ் நீர்மட்டம் குறைவடைதல், மரம், செடி, கொடிகள் வாடுதல்

Monday, 19 October 2020

இலங்கையில் பாடசாலை ஆசிரியர்களின் உரிமைகள், கடமைகள்

 


உரிமைகளைப் பொறுத்தவரையில் வேதனம், வருடாந்த சம்பள உயர்ச்சி, ஓய்வூதியம், விதவைகள் விதுரர் அநாதைகள் ஓய்வூதியம், அரசியல் உரிமைகள், தொழிற்சங்கஉரிமைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். முதலில் ஓய்வூதிய உரிமை பற்றிய விளக்கத்தை இங்கு சுருக்கமாக பார்க்கலாம். ஓர் ஆசிரியர் இளைப்பாறும் போது ஓய்வூதியம் பெறும் உரிமை உடையவராவார். 20 வருட சேவையை முடித்த ஆசிரியர் சுயவிருப்பத்தின் பேரில் ஓய்வு பெறலாம். ஆனால் 55வயது நிறைவின் பின்னரே அவருக்கான ஓய்வூதியம் வழங்கப்படும்.


பெண் ஆசிரியர் 20 வருட சேவையை முடித்து ஓய்வு பெற விரும்பினால் அத்திகதியிலிருந்து ஓய்வூதியம் பெற முடியும். சேவையின் போது அல்லது ஓய்வு பெற்ற பின்னர் ஓர் ஆசிரியர் மரணமடைவாராயின் அவரின் விதவை/விதுரர் ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோர் குறித்த ஆசிரியருக்குரிய ஓய்வூதியத்தைப் பெறும் உரித்துடையவராவார்.


அரச ஊழியரின் பிள்ளையொன்று ஊனமுற்றிருப்பின் அப்பிள்ளை தான் உயிர் வாழும் காலம் வரை தந்தை அல்லது தாயின் ஓய்வூதியத்தைப் பெறலாம். இருவரும் ஓய்வூதியம் பெறுபவர்களாயின் எவரது ஓய்வூதியம் கூடியதோ அதைனை ஓய்வூதியமாகப் பெறலாம்.


ஓர் அரசாங்க ஊழியர் குறைந்த பட்சம் 10 வருட காலம் சேவை செய்து இருந்தால் ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால் இதைப் பெற 55 வயது ஆகி இருக்க வேண்டும்.முடியுமானால் 60 வயது வரை சேவை ஆற்றலாம்.எனினும் பத்து வருட சேவையை பூர்த்தி செய்ய முன்னர் மரணமடைந்தால் துணைக்கு அல்லது அநாதை குழந்தைகளுக்கு இந்த உரித்து உண்டு. யாரும் விரும்பினால் 20 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெறலாம்.ஆனால் 55 வயதானால் மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். ஆசிரியைகள், தாதிகள்,பெண் பொலிஸ் உட்பட சில சேவையைச் சேர்ந்த பெண் அரசாங்க ஊழியர்கள் 20 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெற்றாலும் உடன் ஓய்வூதியம் கிடைக்கும்.


மரணப்பணிக்கொடை:


ஓர் அரச ஊழியர் சேவையின் போது மரணமடைந்தால் மரணப் பணிக்கொடை வழங்கப்படும். அது சேவைக் காலத்தின் அடிப்படையில் வழங்கப்படும். 5வருடத்திற்குட்பட்ட சேவைக் காலம் எனின் ஒருவருட சேவைக்கு ஒருமாதச் சம்பளம் என்ற அடிப்படையிலும், சேவைக்காலம் 5 தொடக்கம் 10வருடத்திற்குட்பட்டதாயின் ஒரு வருடச் சம்பளம், சேவைக்காலம் 10வருடத்திற்கு மேற்பட்டதாயின் கடைசி மாதச்சம்பளத்தின் 90வீதத்தின் 24 மடங்கு ஆகும். 30 வருட காலம் சேவை செய்து இருந்தால் கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் 75% தொடக்கம் 85% குறைக்கப்பட்ட ஓய்வூதியம் (ஓய்வூதியப் பணிக்கொடையைப் பெற்றால் கிடைக்கும் . இது சம்பளத்தைப் பொறுத்து வித்தியாசப்படும். 13280/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருப்பவர் 85%தையும் 37805/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருப்பவர் 75% ஐயும் ஓய்வூதியமாகப் பெறுவார்.அத்தோடு வாழ்க்கைச் செலவுப்படி 3525/= ,விசேட படி 3500/= மேலதிகமாகக் கிடைக்கும்


30 வருட காலச் சேவைக் காலம் இல்லாவிட்டால் 6 மாத காலத்துக்கு 1% குறையும் .20 வருட சேவைக் காலமாக இருந்தால் 10 வருட காலக் குறைவுக்கு 20% குறையும். ஒரு மாதத்துக்கு 0.2% குறையும். ஓய்வூதியப் பணிகொடையைப் பெறாவிட்டால் கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் 90% தொடக்கம் 85% குறைக்கப்படாத ஓய்வூதியமாகக் கிடைக்கும். இதன் 24 மாதப் பெருக்கமே பணிக்கொடை ஆகும். ஒருவர் 16,000/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருந்தால் இதன் 90% மானது 14,400/= ஆகும். இதன் 24 மாதப் பெருக்கத் தொகையான 3,45,600/= ஓய்வூதியப் பணிகொடையாகக் கிடைக்கும்.


அரசியல் உரிமை:

பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு அரசியல் உரிமை இல்லை. இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS), இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை (SLTES), மற்றும் இலங்கை அதிபர் சேவை தரம் (SLPS) 1 க்கு இவ்வுரிமை இல்லை. ஆனால் இலங்கை ஆசிரியர் சேவையைச் (SLTS) சார்ந்தவர்களுக்கு அரசியல் உரிமை உண்டு.அதேவேளை அதிபர் சேவைதரம்2 இற்கும் உண்டு. அரசியல்உரிமை எனும் போது அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் பெறும் உரிமை, அரசியல் கட்சிகளை உருவாக்கும் உரிமை,அரசியல் கட்சிகளில் பதவிகளை வகிக்கும் உரிமை,அரசியல் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை போன்றவற்றைக்குறிப்பிடலாம்.


ஓர் ஆசிரியர் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல்,உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடலாம், பிரசாரம் செய்யலாம், கருத்துத் தெரிவிக்கலாம், துண்டுப்பிரசுரங்கள், பதாதைகள், சுலோகங்கள் கட்டுரைகள் எழுதலாம், பிரசுரம் செய்யலாம்,பத்திரிகைகள் சஞ்சிகைகள் வெளியிடலாம்.


ஆசிரியர் ஒருவர் தேர்தலில் வேட்பாளராக இறங்கவிரும்பினால், வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு ஒருவாரம் முன்பதாகவே விடுமுறையில் செல்ல வேண்டும். இதற்காக அவர் வேட்புமனுத்தாக்கலுக்கு ,10நாட்களுக்கு முன்னதாக அதிபருடாக வலயக்கல்விப்பணிப்பாளருக்கு, எழுத்து மூலம் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும். வெற்றிபெறும் பட்சத்தில் பதவியிலிருந்து இளைப்பாற்றப்படுவார்கள். ஆனால் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இளைப்பாற வேண்டிய அவசியமில்லை. ஆசிரியர் தொழிலோடு, உள்ளூராட்சி பதவியையும் ஆற்றுவதற்கு உரிமையுண்டு. அச்சேவையை ஆற்ற முழுச்சம்பளத்துடன் கூடிய விடுமுறையுண்டு. வழமையான இடமாற்ற நடைமுறையிலரிருந்து அவருக்கு விலக்களிக்கப்படும். ஆனால் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவாராயின் தேர்தல் திகதியிலிருந்து தான்வகித்த பதவியிலிருந்து விலகுமாறு பணிக்கப்படுவார்.


தாபனவிதிக்கோவையின்படி(E.CODE) அரசியல்உரிமை இல்லாதவர்கள் எந்தத் தேர்தலாயினும் தமது வாக்குகளை அளிக்கின்ற உரிமை உள்ளது. அதைத் தவிர ஏனைய அரசியல்நடவடிக்கைகளில் பங்குபற்ற உரிமைகள் இல்லை. ஓர் ஆசிரியர் தனது கடமைகளை சரிவரச் செய்த பின்னர், திணைக்களத் தலைவரால் மறுக்கப்பட முடியாதவை உரிமைகளாகும். அதற்கப்பால் சில வசதிகள் உள்ளன. அவற்றை சலுகைகள் என்போம்.

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...