தலைமைத்துவம் என்பது மனிதர்களை நெறிப்படுத்தி, இலக்குகளை அடைந்து கொள்வதற்காக அவர்களை இயக்கும் திறமையாகும். 'திறமை வகித்தல்' என்பது 'நிர்வகித்தல்' என்பதிலிருந்து வித்தியாசப்படுகின்றது. ஒரு விடயத்தை சிறப்பாக நிறைவேற்றவும் சிறந்த விளைவுகளைப் பெற்றுக் கொள்ளவும் துணைபுரிகின்ற குறிப்பிட்ட சில திறமைகளே நிர்வாகமாகும். தலைமைத்துவ திறமை மனிதனில் இயல்பாக உள்ளதும் தேடி வளர்த்துக் கொள்வதுமாகும். இதற்கு மாற்றமாக தலைமைத்துவப் பண்புகளை அனுபவம்,முயற்சி,கற்றலினூடாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு மனிதனிடத்தில் தலைமைத்துவப் பண்புகள் அதிகரிக்கும் போது, சிறந்த தலைமைத்துவ ஆளுமையை நோக்கிச் செல்லும் வேகம் விரைவாக இருக்கும். பயிற்சி கல்வி அனுபவங்களின் ஊடாக கிடைக்கும் தாக்கம் மேலானதாகக் காணப்படும். ஒருவனிடத்தில் தலைமைத்துவப் பண்பு மறைந்து விடுகின்ற போது அவன் தன்னிடம் தலைமைத்துவ ஆற்றல்களை வளர்த்துக் கொள்வதற்கு நீண்ட காலப் பயிற்சி தேவைப்படுகிறது. கல்வியும், பயிற்சியும்தான் தலைவர்களை உருவாக்குவதில் மிக முக்கிய காரணிகளாகும்.
யார் ஒருவரிடத்தில் இயல்பு, வழக்காறு, கல்வி ஆகிய மூன்று திசைகளினூடாகவும் ஆளுமை வளர்கின்றதோ அவன் சிறப்பின் உச்சத்தில் இருப்பான். சமூகத்திற்கு நெருக்கமானவனாகவும், சமூகத்தில் தலைமைத்துவத்தை தானாக பெற்றுக் கொள்ளக் கூடியவனாகவும் காணப்படுவான். நாளைய முன்னணி வீரர்களை உருவாக்குவதற்கான திட்டம் இவர்களினாலேயே திட்டமிடப்படுகின்றது. மனிதனின் அனைத்து செயற்பாடுகளும் வெற்றியை நோக்கிச் செல்ல முன்திட்டமிடல் செயற்பாடுகள் அவசியமானதாகும். திட்டமிடப்படாத செயற்பாடுகள் 'திசையறியாத படகினைப் போன்றவை' என்பதற்கு அமைவாக தலைமைத்துவ செயற்பாடுகள் முன்னணி வீரர்களை உருவாக்குவதற்காக திட்டமிடப்பட வேண்டும்.
மாணவச் செயற்பாடுகளில் ஈடுபடும் கல்விசார், கல்விசாரா தலைமைத்துவங்கள் நாளைய தலைவர்களையும் எதிர்கால அறிஞர்களையும் உருவாhக்குகின்ற பணியில் ஈடுபட்டிருக்கின்றோம் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும். இப்பணியில் தமது முழுக் கவனத்தையும் திருப்ப வேண்டும். மாணவர்களின்திறமைகளையும் ஆற்றல்களையும் அவர்களது ஆரம்பக் கட்டத்திலிருந்தே கண்டெடுப்பதும் அவற்றை வளர்த்தெடுத்து அவற்றில் கரிசனை காட்டி ,சீரிய முறையில் அவற்றை நெறிப்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டி அவற்றின் பிரயோசனங்களைப் பெற்றுக் கொள்ளவும் வேண்டும்.
நாளைய முன்னனி வீரர்களை உருக்குவாக்குவது என்பது சிறந்த ஆற்றல்களையும், திறமைகளையும் கொண்ட உயர்தர பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குவதாகும். அத்துடன், அவர்களது திறமைகளை வளர்ப்பதையும் அவர்களை பயிற்றுவிப்பதையும் இலக்காகக் கொண்ட கல்வித் திட்டங்களுக்கேற்ப்ப, பொருத்தமான கண்காணிப்பாளர்களின் மூலம் அவர்களை நேரடியாகவே கண்காணிப்பதும் அவர்கள் மீது அதீத கரிசனை காட்டுவதுமாகும்.
பின்பு, அவர்களது ஆற்றல்களையும், சக்தியையும் பூரணமாகக் கண்டெடுத்து அவர்களை குறிப்பிட்ட சில குழுக்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளிலும், குறிப்பான துறைகளிலும் அவர்களது ஆற்றல்களை நெறிப்படுத்த வேண்டும். மேலும், உயர்தர மாணவர்களை அவர்களது ஆற்றலுக்கேற்ப பொருத்தமான கல்லூரிகளுக்கு வழிகாட்டுவதோடு, பல்கலைக்கழகப் பட்டதாரிகளை சமூகத்தில் தாக்கம் மிக்க இடங்களை நோக்கி நகர்த்துவதும் அவசியமாகும்.
ஏதிர்காலத் தலைவர்கள் படையிலிருந்து வெளியாகின்ற மாணவர்களிடமிருந்து உச்சப் பயன் பெறுவதற்கும் அவர்கள் சிறப்பு தேர்ச்சியடைந்த, சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய துறைகளை நோக்கி அவர்களை வழிநடாத்துவதற்குமான பூரணமான ஒரு திட்டத்தை முன்வைப்பதும் அவசியமாகும்.
பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் உயர்தர பாடசாலைகளிலுமுள்ள ஆசிரியத் தலைவர்களோடும் மாணவத் தலைவர்களோடும் கலந்துரையாடுவதன் மூலம் கற்றல் தொடர்பான பல்வேறுபட்ட ஆற்றல்கள், திறமைகள், ஏனைய தலைமைத்துவ ஆற்றல்கள் அனைத்தையும் கொண்ட சிறந்ததொரு குழுவைத் தெரிவு செய்துகொள்ள முடியும்.
தலைமைத்துவக் கொள்கைகள் சிறந்ததாகக் காணப்படும் பொழுதே பயன்மிக்க அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடியும். கொள்கைகள் சர்வாதிகாரப் போக்கைக் கொண்டு காணப்படும் பொழுது இலக்குகள் எட்டாக் கணியாகி விடும். ஹிட்லர் உலகில் பலம்வாய்ந்த தலைவராக காணப்பட்ட போதிலும் அவரின் தோல்விக்கான காரணம் அவரின் கொள்கையில் காணப்பட்ட சர்வாதிகாரமும், நெகிழ்சித்தன்மையற்ற போக்குமேயாகும். ஆகவே நாளைய முன்னணி வீரர்களை உருவாக்கும் பணியில் தலைவர்கள் சிறந்த பண்புகள், ஆற்றல்கள் மற்றும் ஆளுமையையும் கொண்டு காணப்படுவது இன்றியமையாதது ஆகும்.
No comments:
Post a Comment