திருப்திகரமான குடியியல் வாழ்க்கையினையும் அரசியல் வாழ்க்கையினையும் அனுபவிப்பதற்கு மனிதருக்குள்ள அடிப்படை நிபந்தனைகளே உரிமைகள் ஆகும். இதன்படி உரிமைகளைப் பரந்த அடிப்படையில் குடியியல் உரிமைகள் என்றும் அரசியல் உரிமைகள் என்றும் அரசியலாளர்கள் பாகுபடுத்துகின்றனர். குடியியல் உரிமைகளை(சிவில் உரிமைகள்) பொருளாதார உரிமைகள், சமூக உரிமைகள் என்று மேலும் பாகுபடுத்துகின்றனர். உரிமைகளின் தோற்றம் தொடர்பாக மனிதனுக்கு உரிமைகள் பிறப்பிலேயே உரித்தாகுவதாகவும், அரச சட்டங்களால் உருவாகுவதாகவும் இரண்டு கருத்துகள் நிலவி வருகின்றன. உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவையாகும்.
குடியியல் வாழ்க்கையினை திருப்திகரமாக அனுபவிப்பதற்கு மனிதர்களுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத நிபந்தனைகளே குடியியல் உரிமைகளாகும். இதில் ஒரு வகையான சமூக உரிமைகள் என்பது சமூக வாழ்வினை திருப்திகரமாக மேற்கொள்ள மனிதருக்கு இருக்க வேண்டிய நிபந்தனைகளாகும். அதேபோல் பொருளாதார வாழ்வினை திருப்திகரமாக மேற்கொள்ள மனிதருக்கு இருக்க வேண்டிய நிபந்தனைகள் மற்றுமொரு வகையான பொருளாதார உரிமைகள் ஆகும். அரசியல் உரிமைகள் என நோக்கும்போது அரசியல் வாழ்வினை திருப்திகரமாக மேற்கொள்ள மனிதருக்கு இருக்க வேண்டிய நிபந்தனைகளாகும்.
உரிமைகளை பாதுகாக்க நவீன அரசுகள் மேற்கொள்ளும் வழிமுறைகளாக அடிப்படை உரிமைகளை யாப்பில் உள்ளடக்கல், சட்டவாட்சியை உறுதிபடுத்தல், மனித உரிமை ஆணைக்குழுக்களை நியமித்தல், ஒம்புட்ஸ்மன் அதிகாரிகளை உருவாக்கல், அரசியல் அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்தல், அரசு சமயசார்பற்றதாக இருத்தல், சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான தொடர்பாடல் சாதனங்களை செயற்பட வைத்தல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
மனித இருத்தலுக்கு அவசியமானதும் அவர்களின் சுய கௌரவத்தை பாதுகாப்பதுமான வாய்ப்புகளே மனித உரிமைகள் ஆகும். இவை இயற்கை உரிமைகளினதும் குடியியல் உரிமைகளினதும் கலவை ஆகும். இவை உலகிலுள்ள சகல இடங்களிலும் சகல மனிதருக்கும் பொதுவானவை ஆகும். மனித உரிமைகளில் எவற்றை அத்தியாவசியமாக பாதுகாக்க வேண்டும் என ஒவ்வொரு அரசும் தீர்மானித்து அது அரசியல் யாப்பில் உள்ளடக்கும் உரிமைகளே அடிப்படை உரிமைகளாகும். இவை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. அரசுகள் இவற்றை பாதுகாப்பதற்கு சட்ட ரீதியாக கடமைப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment