உலகில் பல்வேறு பிராந்தியங்கள் பொருளாதார வளர்ச்சியில் வலுப்பெற்று பொருளாதார ரீதியில் ஒன்றிணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்ற சூழலில் பல்வேறு வகையான தனித்துவ ஆற்றல்களை கொண்டுள்ள தெற்காசியப் பிராந்தியம் இன்னும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளில் சிக்கி பொருளாதார நன்மையை உறுப்பு நாடுகளின் மக்களுக்கு பெற்றுக்கொடுக்காமல் பயணிக்கின்றது.
சார்க் பிராந்தியத்தில் வருடமொன்றுக்கு 81164 மில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கான ஆற்றல் காணப்படுகின்றபோதிலும் ஐ.நா.வின் அண்மைய தரவுகளின்படி வருடமொன்றுக்கு 26806 மில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக நடவடிக்கைகளே உறுப்பு நாடுகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் எந்தளவு தூரம் தெற்காசியாவானது பிராந்தியம் என்றவகையில் பொருளாதார ரீதியில் பின்னடைவில் சிக்கியிருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது.
தற்போதைய உலக நிலைமைகளை எடுத்துப் பார்க்கும்போது பிராந்திய ரீதியில் பொருளாதார கூட்டிணைவுடன் செயற்படுவது பாரிய நன்மைகளைத் தருவதாகவே அமைந்திருக்கின்றது. இதற்கு பல உதாரணங்களை முன்வைக்கலாம். அவ்வாறு பல உதாரணங்கள் உலகில் இருக்கின்றபோதிலும் தெற்காசியாவில் அதனை சாத்தியப்படுத்துவது கடினமாகவே உள்ளது.
அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் வோல்டர் க்ரோன்கிட் ஊடகவியல் பாடசாலையின் டொனல்ட் டப்ளியு ரெய்னோல்ட்ஸ் வர்த்தக ஊடகவியலுக்கான தேசிய நிலையத்தின் ஏற்பாட்டில் டுபாயில் ஊடகவியலாளர்களுக்கான மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதில் சார்க் நாடுகளின் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டதுடன் சார்க் பிராந்தியம் பொருளாதார ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் ஆராய்ந்தனர். இதன்போது பல விடயங்கள் வெளிக்கொணரப்பட்டன.
தெற்காசியாவினால் ஏன் முடியவில்லை?
பிராந்திய ரீதியில் பொருளாதார கூட்டிணைவுடன் செயற்படுவதானது உறுப்பு நாடுகளுக்கு பாரிய நன்மைகளை கொடுப்பதாகவே அமைந்திருக்கின்றது. விசேடமாக ஐரோப்பிய ஒன்றியம் ஆசியான்இ போன்ற அமைப்புக்கள் இன்று பொருளாதார ரீதியில் இணைந்து செயற்படுவதன் மூலமாக அதன் உறுப்பு நாடுகளுக்கு கிடைத்துள்ள நன்மைகள் தொடர்பில் அவதானம் செலுத்தும்போது சார்க் பிராந்தியம் பொருளாதார ரீதியில் இணைந்து செயற்படவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர முடிகின்றது.
சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டு 35 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் இதுவரை தெற்காசிய பிராந்திய அமைப்பினால் பொருளாதார ரீதியில் ஒருங்கிணைந்து செயற்பட்டு அதன் நன்மைகளை பெற முடியாத சூழலே நிலவுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக இந்தப் பிராந்தியத்தில் காணப்படுகின்ற இந்தியா இலங்கை பங்களாதேஷ்,மாலைதீவு,பாகிஸ்தான்,நேபாளம் பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய ஒவ்வொரு நாடுகளும் தனித்துவமான ஒரு பிரச்சினைகளுடன் உள்ளன.
அதேபோன்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் காணப்படுகின்ற நீண்டகால முரண்பாடும் சார்க் பிராந்தியம் பொருளாதார ரீதியில் ஒன்றிணைவதற்கு பாரிய தடையாக உள்ளது.
தெற்காசியாவை வாட்டும் வறுமை
உலகின் ஏனைய பிராந்தியங்கள் பொருளாதார ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுகின்றதால் ஏற்படுகின்ற நன்மைகள் தொடர்பில் சார்க் நாடுகளின் தலைவர்கள் உணர்ந்து செயற்படுவதற்கு முன்வரவேண்டும். சார்க் நாடுகளைப் பொறுத்தவரையில் வறுமையும் வேலையின்மையும் தலைவிரித்தாடிக்கொண்டே இருக்கின்றன. வறுமையை எடுத்து நோக்குவோமானால் 54 வீதமான வறுமை ஆப்கானிஸ்தானில் காணப்படுகின்றது.
அதேபோன்று இந்தியாஇ மற்றும் பங்களாதேஷ்இ பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 20 வீதத்திற்கும் மேற்பட்ட வறுமை வீதம் காணப்படுகின்றது. எனவே இவற்றை போக்குவதற்கு வெளிநாட்டு முதலீடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். அதேபோன்று பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு அதிகரிக்கப்படவேண்டும். எனினும் சார்க்பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் இதற்கான ஆற்றல் இருந்தும் அரசியல் தேவை இல்லாமையினால் வெற்றியை நோக்கி நகர முடியாமல் உள்ளது.
100 வருட பகையை மறந்த பிரான்ஸ் – ஜேர்மன்
இன்று நாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சியை எடுத்துநோக்கினால் உலகத்தில் காணப்படுகின்ற பொருளாதார ரீதியில் மிகப் பலமான ஒன்றாக காணப்படுகின்றது. அதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே முரண்பாடுகள் இல்லை என்று கூறிவிட முடியாது. ஜேர்மன்இ பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் 100 வருட பகைமை காணப்பட்டது. எனினும் பொருளாதார ரீதியில் ஒன்றிணையவேண்டிய தேவையை முன்னிறுத்தி அந்தப் பகைமையை மறந்து அந்த இரண்டு நாடுகளும் இணைந்து செயற்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு முன்னர் அயர்லாந்து பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. ஆனால் இன்று அந்த நாடு பாரிய வளர்ச்சியை அடைந்திருக்கின்றது. இதற்கு பிராந்தியத்தில் பொருளாதார ஒன்றிணைவே பிரதானகாரணமாகும். எனவே மக்களுக்கு நன்மையைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சிக்காக நாடுகள் ஏனைய புறக் காரணிகளை புறந்தள்ளிவிட்டு ஒன்றிணைய வேண்டும் என்பதே இன்றைய தேவையாக காணப்படுகின்றது.
இந்தியா – பாகிஸ்தான்
இந்த இடத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான புரிந்துணர்வே மிகவும் அவசியமாகின்றது. இந்த இரண்டு நாடுகளுக்குமிடையில் காணப்படுகின்ற முரண்பாடுகளே பிராந்தியத்தை வாட்டி வதைக்கின்றது. இலங்கையும் இந்தியாவும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் பின்னர் பாரிய வளர்ச்சி கண்டிருக்கின்றது. 2000ஆம் ஆண்டு இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அமுலுக்கு வந்தது. அதன் பின்னர் இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துள்ளன. எனவே இவ்வாறு பொருளாதார தடைகளை களைந்து பிராந்திய ரீதியில் இணைந்து செயற்படுவதானது மிகவும் முக்கியத்துவமிக்கதாக காணப்படுகின்றது.
சார்க் பிராந்தியத்தின் மனிதவளம்
விசேடமாக சார்க் நாடுகளுக்கிடையில் மனிதவளம் மிக முக்கியமான பொக்கிஷமாக காணப்படுகின்றது. சார்க் நாடுகளில் பயிற்றுவிக்கப்பட்ட திறமையான மனித வளம் காணப்படுகின்றது. ஆனால் அவை இன்று மேற்கு நாடுகளிலேயே பயன்படுத்தப்படுகின்றன. அதனை சார்க் நாடுகள் பயன்படுத்துவதற்கு முன்வரவேண்டும். அதேபோன்று தொழில்நுட்ப அறிவை சார்க் நாடுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும். சார்க் பிராந்தியத்தில் சில நாடுகள் தொழில்நுட்ப அறிவில் முன்னேற்றமடைந்துள்ளன.
சார்க் நாடுகளின் தலைவர்களின் கவனத்துக்கு
இங்கு மிக முக்கியமாக சார்க் நாடுகளின் தலைவர்கள் சார்க் பிராந்தியம் என்ற ரீதியில் பொருளாதார ரீதியில் ஒன்றிணைந்து செல்லவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துகொள்ள வேண்டும். உலக சனத்தொகையில் கால்வாசிப்பேர் சார்க் பிராந்தியத்தில் வாழ்கின்றனர். எனவே இங்கு காணப்படுகின்ற பொருளாதார சந்தைவாய்ப்புக்கள் தொடர்பில் ஏனைய நாடுகள் கவனம் செலுத்தவேண்டும். சார்க் நாடுகளுக்கிடையிலான முதலீடுகளும் தலைவர்களுக்கிடையிலான அர்ப்பணிப்புகளும் இங்கு முக்கியமானதாக காணப்படுகின்றது.
இந்தியா வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது. இலங்கை இறப்பர்இ தேயிலைஇ ஆடை உற்பத்தியிலும் மீன்பிடியிலும் முன்னணி வகிக்கின்றது. பாகிஸ்தான் பாஸ்மதி அரிசியில் பிரபலமாகியிருக்கிறது. பங்களாதேஷ் ஆடைக்கைத்தொழிலில் முன்னேற்றமடைந்துள்ளது. எனவே இந்த நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான திட்டத்தின் கீழ் செயற்படுவது பாரிய பொருளாதார நன்மைகளை நாடுகளுக்கு பெற்றுக்கொடுக்கும்.
எனவே பிராந்தியம் என்ற ரீதியில் பொருளாதார ரீதியில் இணைந்து செயற்படும்போது பிராந்தியத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற நாடுகளும் உயர் நன்மையை அடையும். நாகேஷ் குமாரின் யோசனை
இது தொடர்பில் டுபாய் மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடகளின் ஆசிய பசுபிக் பொருளாதார சமூக விவகாரங்களுக்கான பணிப்பாளர் டாக்டர் நாகேஷ்குமார் ஒரு முக்கிய விடயத்தை குறிப்பிட்டார். அதாவது சார்க் பிராந்தியத்தில் அமைதி நிலவவேண்டுமாயின் அதற்கு காணப்படுகின்ற ஒரே வழி பிராந்தியம் பொருளாதார ரீதியில் ஒன்றிணைவதாகும். பொருளாதார ரீதியில் ஒவ்வொரு நாடுகளும் தங்கியிருக்கும் பட்சத்தில் அங்கு அமைதிக்கு பங்கம் ஏற்படாது என்பதே உண்மையாகும் என்ற ஒரு யதார்த்தமான விடயத்தை அவர் கூறினார்.
காரணம் அமைதிக்கு பங்கம் ஏற்படும்போது பொருளாதார தேவையைக் கருத்தில் கொண்டு நாடுகள் முரண்பாடுகளை தவிர்க்கும் என்பதே உண்மையாகும். அதனால் பிராந்தியத்தில் நாடுகளுக்கிடையிலான பொருளாதார தங்கியிருத்தலும் ஒரு முக்கிய காரணியாகவே உள்ளது.
டாக்டர் கணேஷமூர்த்தி
இதேவேளை இந்த விடயம் குறித்து கொழும்பு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் கணேசமூர்த்தி இவ்வாறு கூறுகிறார்.
பிராந்திய ரீதியில் பொருளாதார ஒன்றிணைவு ஏற்படவேண்டுமாயின் அது நான்கு கட்டங்களில் அமையவேண்டும். சுதந்திர வர்த்தக நடவடிக்கை சுங்க ஒன்றியம் பொது சந்தை மற்றும் பொருளாதார ஒன்றிணைவு ஆகிய நான்கு கட்டங்கள் இங்கு காணப்படுகின்றன. தற்போது நாம் ஐரோப்பிய ஒன்றியத்தை எடுத்துப் பார்த்தால் அது நான்காவது கட்டத்தையும் தாண்டி நிற்கின்றது. ஆனால் தெற்காசிய பிராந்தியமானது இன்னும் முதலாவது கட்டத்திலேயே உள்ளது. உண்மையில் தெற்காசியாவானது முதலாவது கட்டத்தில் கூட இல்லை என்று கூறலாம்.
எனவே தெற்காசிய பிராந்தியத்தில் நாடுகளுக்கு இடையில் பொருளாதார ஒன்றிணைவு ஏற்பட வேண்டுமாயின் அதன் ஆற்றலை தலைவர்கள் உணரவேண்டும். அத்துடன் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காணப்படுகின்ற முரண்பாடுகளே பின்னடைவு பிரதான காரணமாகும்.
சார்க் நாடுகளுக்கு இடையிலான சப்டா எனப்படுகின்ற சார்க் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையும் வெற்றியளிக்கவில்லை. எனவே தெற்காசிய பிராந்தியம் பொருளாதார ரீதியில் ஒன்றிணைந்து மக்களுக்கு அதன் நன்மைகள் கிடைக்க வேண்டுமானால் தெற்காசிய பிராந்திய நாடுகளில் அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும் என்று டாக்டர் கணேசமூர்த்தி கூறுகிறார்
இவ்வாறு பார்க்கும்போது சார்க் பிராந்தியம் பொருளாதார ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முதலில் அதன் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். துணிச்சலான முடிவுகளை எடுக்கவேண்டும். தற்போதைய சூழலில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பலமான அமைப்பாக இருப்பதற்கு காரணம் அந்த நாடுகளின் தலைவர்களின் அர்ப்பணிப்பாகும். ஆசியான் அமைப்பையும் நாம் இந்த வகைக்குள் சேர்க்கலாம். எனவே சார்க் நாடுகளின் தலைவர்கள் இதுகுறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்.
அமர்ந்து பேசுங்கள்
இதற்கு சார்க் தலைவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து முதலில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். ஆரம்பக் கட்டமாக சார்க் நாடுகளில் பொருளாதார நிபுணர்கள் பங்கேற்கும் ஒரு மாநாட்டை நடத்தவேண்டும். தற்போது இந்த ஊடகவியலாளர்களுக்கான மாநாட்டை நடத்திய அரிசோனா பல்கலைக்கழகமே சார்க் நாடுகளின் பொருளாதார நிபுணர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டை நடத்தி சார்க் பிராந்தியம் பொருளாதார ரீதியில் இணைந்து செயற்படுவதால் எவ்வாறான நன்மைகளை பெற்றுக்கொள்ளும் என்பது குறித்து ஆராயலாம். அது தொடர்பில் ஒரு பிரகடனத்தை வெளியிடலாம். அந்தப் பிரகடனத்தை சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பி சார்க் பிராந்தியத்தில் காணப்படுகின்ற பொருளாதார ஆற்றலை உணரவைக்க வேண்டும்.
அதனூடாக ஐரோப்பிய ஒன்றியம் போன்ற உலகில் ஒரு பலம்வாய்ந்த பொருளாதார பிராந்தியமாக சார்க் பிராந்தியத்தை உருவாக்கலாம் என்ற விடயம் உணர்த்தப்பட வேண்டும். இதன் ஆரம்ப நடவடிக்கைகள் கடினமானதாக இருக்கலாம். ஆனால் இதற்கான முயற்சிகளை எடுப்பது அவசியமாகிறது.
இன்று உலகில் வலுவான அமைப்பாக இருக்கின்ற ஐரோப்பிய ஒன்றியம் ஒரே இரவில் இந்த நிலையை அடையவில்லை. பாரிய போராட்டங்கள் யுத்தங்களின் பின்னரே ஐரோப்பிய ஒன்றியம் தற்போது இந்த நிலைமைக்கு வந்திருக்கின்றது.
எனவே இதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக முன்னெடுக்கலாம். கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் பொருளாதார நிபுணர்கள் இது தொடர்பில் வலியுறுத்தும் அழுத்தங்களை பிரயோகிப்பது அவசியமாகின்றது.
சார்க் பிராந்தியம் பொருளாதார ரீதியில் ஒன்றிணைவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் மிக அதிகமாகும். இதனூடாக உறுப்பு நாடுகளின் வறுமைஇ வேலையின்மை வீதங்களை குறைக்க முடியும். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும். பிராந்தியத்தின் மனிதவளம்இ தொழில்நுட்ப அறிவு என்பன பலமடையும். மக்கள் பொருளாதார நன்மைகளை அதிகளவில் பெற்றுக்கொள்வார்கள்.
தெற்காசிய அபிவிருத்தி வங்கியை உருவாக்கலாம்
தற்போது சார்க் பிராந்தியத்திலுள்ள நம்பிக்கையின்மையை துடைத்தெறிய முடியும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் முரண்பாடு எவ்வாறு சார்க் பொருளாதார ரீதியில் ஒன்றிணைவதை தடுக்கின்றதோ அதனைவிட சார்க் பிராந்தியத்தில் காணப்படும் நம்பிக்கையின்மை அழுத்தம் பிரயோகிக்கும் காரணியாக உள்ளது. அதனால் அந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்படுவது இன்றியமையாதது. மேலும் போக்குவரத்து துறை வலுவடைவதுடன் மக்கள் தொடர்பும் அதிகரிக்கும்.
தெற்காசிய அபிவிருத்தி வங்கி ஒன்றை உருவாக்குவதற்கான குறிக்கோளை நோக்கியும் பயணிக்கலாம். தெற்காசிய வங்கியை உருவாக்கவேண்டுமானால் மேலே குறிப்பிடப்பட்ட நான்கு கட்டங்களில் நான்காவது கட்டத்துக்கு சார்க் பிராந்தியம் செல்லவேண்டும். ஆனால் சார்க் பிராந்தியம் பொருளாதார ஒன்றிணைவில் இன்னும் முதலாவது கட்டத்தையே அடையவில்லை என்பதே இங்கு யதார்த்தமானதாக உள்ளது.
சார்க் பிராந்தியம் மிகவும் மெதுவாகவே பொருளாதார ரீதியில் அடியெடுத்து வருகின்றது. விரைவுபடுத்த வேண்டியது அவசியமாகும். குறிப்பாக புவியியல் ரீதியிலான சார்க் பிராந்தியத்தின் அமைவிடம் தொடர்பாக சார்க் தலைவர்கள் உணர்ந்து செயற்படுவதுடன் அதன் ஆற்றலை பயன்படுத்த வேண்டும்.
சார்க் பிராந்தியத்தில் காணப்படும் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஆற்றலை உறுப்பு
நாடுகளின் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். விசேடமாக அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி மக்களை தெளிவு படுத்தவேண்டும். சார்க் பிராந்தியத்தில் பதற்றத்தை தடுப்பதற்கான ஒரே வழி பொருளாதார ரீதியான ஒன்றிணைவு என்பதே உண்மையாகும்.
No comments:
Post a Comment