Tuesday, 20 October 2020

ஆரம்பக்கல்வி




ஆரம்பக்கல்வி என்பது எதிர்கால தலைவர்களை சிறந்த முறையில் உருவாக்குவதில் அச்சாணியாகத் திகழ்கிறது. அது சிறப்பாக அமைந்தால் தான் எதிர்கால இலக்குகளும் வெற்றிவாகை சூடும் என்று கூறுவதில் ஐயமில்லை. இதை அடிப்படையாகக்கொண்டே திட்டங்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றன. முன்பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் 5 வயதுககுப் பின் ஆரம்ப பாடசாலைக்குள் நுழைகின்றனர். இவர்கள் உள்ளத்திலும் உடலிலும் சிறுவர்கள். ஆதலால் இவர்களுடன் உரையாடுவதும் பழகுவதும் மென்மையானதாகக் காணப்பட வேண்டும். அப்போதே பிள்ளை அச்சமடையாமல் கல்வி கறக முன்வரும் பிள்ளையைப் பார்த்து அதட்டாமல் ஆசிரியர்களும் பெற்றோர்களும் நல்ல முறையில் அணுக வேண்டும். இக்காலப்பகுதியில் பாடசாலைகளில் குறைந்தளவு நேரமே கல்வி கற்பர். அதிகளவான நேரத்தை வீட்டில் பெற்றோர்களுடனேயே கழிப்பர். இந்நிலையில் பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோர்கள் அதிக செல்வாக்குடையவர்களாகக் காணப்படுவதை நாம் அறியலாம்.


சிறுபிள்ளைகளை பெற்றோர்கள் சுதந்திரமாக விட வேண்டும். இதனை பாரதியார் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.


“ஓடி விளையாடு பாப்பா- நீ

ஓங்திருக்கலாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா- ஒரு

குழந்தையை வையாதே பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு

பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுவதும் விளையாட்டு-

இதை

வழக்கப்படுத்திக் கொள்ளு

பாப்பா”


இவ்வாறு பிள்ளைகள் சுதந்திரமாக இருக்கும் பட்சத்திலேயே உடலபிவிருத்தி, சமூக மனவெழுச்சி அபிவிருத்தி என்பன பிள்ளைகளிடத்தில் தோன்றும். தாய் தந்தையர் பிள்ளையுடன் அன்புடனும் அரவணைப்புடனும் இருத்தல் வேண்டும். அப்போதே அவர்களும் அவ்வாறான மனநிலையைப் பெறுவர். நல்ல கதைகளையும் கருத்துக்களையும் கூறுவதனால் அகமகிழ்ந்து அதனூடாக பல எண்ணக்கருக்களை வளர்த்துக் கொள்வர்.


குழந்தைப் பருவத்திலிருந்து பிள்ளைப் பருவத்தில் பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு சமூக மனவெழுச்சி சார் விருத்தி, அறிவாற்றல் விருத்தி, ஆக்கத்திறன் விருத்தி போன்ற பல விருத்திகளை மேம்படுத்த ஆசிரியர்கள் கவனமெடுத்தல் வேண்டும். “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்பதற்கிணங்க சிறுவயதிலேயே பிள்ளைகள் ஆர்வமாய் இருக்கும் துறைகளை இனங்கண்டு அத்துறையினூடாக அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.


பாடசாலை காலத்தில் மைற்கல்லாக திகழும் ஆரம்பக்கல்வியானது வாசிப்பு, எழுத்து, கணிதம் ஆகியவற்றை கற்பிப்பதோடு கீழ்படிதல், ஒழுக்க விதிமுறைகள், பிள்ளைகளிடம் அடங்கியுள்ள விசேட சமாத்தியம், உள்ளார்ந்த ஆற்றல் ஆகியவற்றை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டும். பிள்ளையின் அறிவை மேலும் விருத்தி, செய்வதற்காக சிந்தித்து வினாக்களைப் பிறப்பித்து அவற்றிற்கான பதில்களை கண்டுபிடிக்கும் ஆற்றலை வளர்க்க வேண்டும். மனதைக்’ கொண்டும் கரத்தைக் கொண்டும் கற்பனையால் உருவாகும் ஆற்றலை விருத்தி செய்தல் வேண்டும். தானாகவே அறிவைப் பெற்று அவ்வறிவை பிரயோகம் செய்யும் முறையைக் கற்றுக்கொள்ள வழிப்படுத்தல் அவசியம். முதியோர், ஆசிரியர் மற்றும் பிள்ளைகள் ஆகியோருக்கு ஆதரவளித்து கணம்பண்ணும் வழக்கத்தை வளர்த்தல், வேறுபட்ட கலாசாரங்களையும் மற்றவர்களின் கருத்துக்களையும் புரிந்துணர்ந்து அவற்றுக்கு மதிப்பளித்து நடக்கும் பண்பை வளர்த்தல் மனிதர்கள் தாவரங்கள், விலங்கினங்கள் உட்பட சுற்றாடலைப் பாதுகாக்கும் பண்பை ஓங்கச் செய்தல் இவ்வாறாக அடிப்படை இலட்சியங்களை உள்ளடக்கியதாகவே ஆரம்பக்கல்வி வடிவமைக்கப்பட்டுள்ளது.


கல்வியாளர் மரியா மொண்டிசோரியின் கருத்துப்படி பிள்ளைகட்கு “சூழலுடன் பொருந்தி வாழக்கூடிய தனி ஆற்றல்களை வளர்க்கும் விளையாட்டு மூலமான தொடர் செயற்பாட்டுக் கல்வி அவசியம்” எனக் குறிப்பிடுகின்றார். எனவே நாமும் இதனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டியவர்களாகின்றோம். அறிஞர் ஜோன் ரூசோ குறிப்பிடுகையில் “பிள்ளையை இயற்கையுடன் சங்கமிக்க விட வேண்டும்” என்கிறார். அதனூடாக நாம் பிள்ளையை கற்பிக்க முயல வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார். எனவே இவ்வாறான கருத்துக்களின் அடிப்படையில் எமது ஆரம்பக் கல்வி கட்டமைக்கப்பட வேண்டியது தேவையான ஒன்றாகும். இன்று இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்வி சீரதிருத்தத்திற்கமைய விளையாட்டு மூலமான கல்வி முதனிலைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


ஆரம்பக் கல்வியில் மாணவர்கள்


எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள்


1. பயிற்சிபெற்ற ஆசிரியர்களின்மை


2. பாடசாலைகளில் பெளதீகவளப் பற்றாக்குறை. மேசை, தளபாடங்கள் இல்லை. கட்டட வசதியின்மை.


3. போசாக்கு குறைபாடு


4. சுகாதாரப் பிரச்சினைகள்


5. மனித வளப் பற்றாக்குறை


6. சூழல் பிரச்சினைகள்


7. பெற்றோரின் அக்கறையின்மை


8. சமூக ஒத்துழைப்பு இல்லாமை


எமது சமூகத்திலுள்ள இவ்வாறான பல விடயங்களைக் கருத்திற் கொண்டு பிரச்சினைகள் காணப்படும் இடத்து அவற்றை நிவர்த்தி செய்து கல்வியை விருத்தி செய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும். அப்போதே திறமுடைய எதிர்கால நல்லவர்களை எமது சமூகம் காணும். பிள்ளைகளுக்கு குழுமுறைக் கல்வி, அபிநயக்கல்வி, செயற்பாட்டுக்கல்வி, விளையாட்டுக் கல்வி, சூழலுடன் இசைவாக்கம் அடையும் கல்வி முதலானவற்றை வழங்கியும் அவற்றோடு அழகியற் கலைகளினூடாக விருத்தி பெறச் செய்து அறிவாற்றல் விருத்தி பெறச் செய்ய வேண்டும். பாடசாலையின் இச்செயற்பாடுகளுக்கு பெற்றோர்களும் பக்கபலமாக இருத்தல் வேண்டும். எனவே எமது சமூகத்திலுள்ளோர்களுக்கும் இவற்றைக் கருத்திற் கொண்டு செயற்பட்டு ஆரம்பக் கல்வியை விருத்தியடையச் செய்ய வேண்டியவர்களாகின்றோம்.


எனவே ஆரம்பக் கல்வியின் அத்திவாரம் ஒழுங்காகவும் கரிசணையோடும் செப்பனிடப்பட்டால் தான் உயர் நிலைக்கல்வியின் வளர்ச்சி சீராகக் காணப்படும். ’ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்” என்றார் திருவள்ளுவர். இதனால் பெற்றோர்களின் நீண்டநாள் கனவும் கூட நிறைவேறும் தருணம் உருவாகிறது. 

No comments:

Post a Comment

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...