Monday, 19 October 2020

இலங்கையில் பாடசாலை ஆசிரியர்களின் உரிமைகள், கடமைகள்

 


உரிமைகளைப் பொறுத்தவரையில் வேதனம், வருடாந்த சம்பள உயர்ச்சி, ஓய்வூதியம், விதவைகள் விதுரர் அநாதைகள் ஓய்வூதியம், அரசியல் உரிமைகள், தொழிற்சங்கஉரிமைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். முதலில் ஓய்வூதிய உரிமை பற்றிய விளக்கத்தை இங்கு சுருக்கமாக பார்க்கலாம். ஓர் ஆசிரியர் இளைப்பாறும் போது ஓய்வூதியம் பெறும் உரிமை உடையவராவார். 20 வருட சேவையை முடித்த ஆசிரியர் சுயவிருப்பத்தின் பேரில் ஓய்வு பெறலாம். ஆனால் 55வயது நிறைவின் பின்னரே அவருக்கான ஓய்வூதியம் வழங்கப்படும்.


பெண் ஆசிரியர் 20 வருட சேவையை முடித்து ஓய்வு பெற விரும்பினால் அத்திகதியிலிருந்து ஓய்வூதியம் பெற முடியும். சேவையின் போது அல்லது ஓய்வு பெற்ற பின்னர் ஓர் ஆசிரியர் மரணமடைவாராயின் அவரின் விதவை/விதுரர் ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோர் குறித்த ஆசிரியருக்குரிய ஓய்வூதியத்தைப் பெறும் உரித்துடையவராவார்.


அரச ஊழியரின் பிள்ளையொன்று ஊனமுற்றிருப்பின் அப்பிள்ளை தான் உயிர் வாழும் காலம் வரை தந்தை அல்லது தாயின் ஓய்வூதியத்தைப் பெறலாம். இருவரும் ஓய்வூதியம் பெறுபவர்களாயின் எவரது ஓய்வூதியம் கூடியதோ அதைனை ஓய்வூதியமாகப் பெறலாம்.


ஓர் அரசாங்க ஊழியர் குறைந்த பட்சம் 10 வருட காலம் சேவை செய்து இருந்தால் ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால் இதைப் பெற 55 வயது ஆகி இருக்க வேண்டும்.முடியுமானால் 60 வயது வரை சேவை ஆற்றலாம்.எனினும் பத்து வருட சேவையை பூர்த்தி செய்ய முன்னர் மரணமடைந்தால் துணைக்கு அல்லது அநாதை குழந்தைகளுக்கு இந்த உரித்து உண்டு. யாரும் விரும்பினால் 20 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெறலாம்.ஆனால் 55 வயதானால் மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். ஆசிரியைகள், தாதிகள்,பெண் பொலிஸ் உட்பட சில சேவையைச் சேர்ந்த பெண் அரசாங்க ஊழியர்கள் 20 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெற்றாலும் உடன் ஓய்வூதியம் கிடைக்கும்.


மரணப்பணிக்கொடை:


ஓர் அரச ஊழியர் சேவையின் போது மரணமடைந்தால் மரணப் பணிக்கொடை வழங்கப்படும். அது சேவைக் காலத்தின் அடிப்படையில் வழங்கப்படும். 5வருடத்திற்குட்பட்ட சேவைக் காலம் எனின் ஒருவருட சேவைக்கு ஒருமாதச் சம்பளம் என்ற அடிப்படையிலும், சேவைக்காலம் 5 தொடக்கம் 10வருடத்திற்குட்பட்டதாயின் ஒரு வருடச் சம்பளம், சேவைக்காலம் 10வருடத்திற்கு மேற்பட்டதாயின் கடைசி மாதச்சம்பளத்தின் 90வீதத்தின் 24 மடங்கு ஆகும். 30 வருட காலம் சேவை செய்து இருந்தால் கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் 75% தொடக்கம் 85% குறைக்கப்பட்ட ஓய்வூதியம் (ஓய்வூதியப் பணிக்கொடையைப் பெற்றால் கிடைக்கும் . இது சம்பளத்தைப் பொறுத்து வித்தியாசப்படும். 13280/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருப்பவர் 85%தையும் 37805/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருப்பவர் 75% ஐயும் ஓய்வூதியமாகப் பெறுவார்.அத்தோடு வாழ்க்கைச் செலவுப்படி 3525/= ,விசேட படி 3500/= மேலதிகமாகக் கிடைக்கும்


30 வருட காலச் சேவைக் காலம் இல்லாவிட்டால் 6 மாத காலத்துக்கு 1% குறையும் .20 வருட சேவைக் காலமாக இருந்தால் 10 வருட காலக் குறைவுக்கு 20% குறையும். ஒரு மாதத்துக்கு 0.2% குறையும். ஓய்வூதியப் பணிகொடையைப் பெறாவிட்டால் கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் 90% தொடக்கம் 85% குறைக்கப்படாத ஓய்வூதியமாகக் கிடைக்கும். இதன் 24 மாதப் பெருக்கமே பணிக்கொடை ஆகும். ஒருவர் 16,000/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருந்தால் இதன் 90% மானது 14,400/= ஆகும். இதன் 24 மாதப் பெருக்கத் தொகையான 3,45,600/= ஓய்வூதியப் பணிகொடையாகக் கிடைக்கும்.


அரசியல் உரிமை:

பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு அரசியல் உரிமை இல்லை. இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS), இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை (SLTES), மற்றும் இலங்கை அதிபர் சேவை தரம் (SLPS) 1 க்கு இவ்வுரிமை இல்லை. ஆனால் இலங்கை ஆசிரியர் சேவையைச் (SLTS) சார்ந்தவர்களுக்கு அரசியல் உரிமை உண்டு.அதேவேளை அதிபர் சேவைதரம்2 இற்கும் உண்டு. அரசியல்உரிமை எனும் போது அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் பெறும் உரிமை, அரசியல் கட்சிகளை உருவாக்கும் உரிமை,அரசியல் கட்சிகளில் பதவிகளை வகிக்கும் உரிமை,அரசியல் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை போன்றவற்றைக்குறிப்பிடலாம்.


ஓர் ஆசிரியர் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல்,உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடலாம், பிரசாரம் செய்யலாம், கருத்துத் தெரிவிக்கலாம், துண்டுப்பிரசுரங்கள், பதாதைகள், சுலோகங்கள் கட்டுரைகள் எழுதலாம், பிரசுரம் செய்யலாம்,பத்திரிகைகள் சஞ்சிகைகள் வெளியிடலாம்.


ஆசிரியர் ஒருவர் தேர்தலில் வேட்பாளராக இறங்கவிரும்பினால், வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு ஒருவாரம் முன்பதாகவே விடுமுறையில் செல்ல வேண்டும். இதற்காக அவர் வேட்புமனுத்தாக்கலுக்கு ,10நாட்களுக்கு முன்னதாக அதிபருடாக வலயக்கல்விப்பணிப்பாளருக்கு, எழுத்து மூலம் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும். வெற்றிபெறும் பட்சத்தில் பதவியிலிருந்து இளைப்பாற்றப்படுவார்கள். ஆனால் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இளைப்பாற வேண்டிய அவசியமில்லை. ஆசிரியர் தொழிலோடு, உள்ளூராட்சி பதவியையும் ஆற்றுவதற்கு உரிமையுண்டு. அச்சேவையை ஆற்ற முழுச்சம்பளத்துடன் கூடிய விடுமுறையுண்டு. வழமையான இடமாற்ற நடைமுறையிலரிருந்து அவருக்கு விலக்களிக்கப்படும். ஆனால் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவாராயின் தேர்தல் திகதியிலிருந்து தான்வகித்த பதவியிலிருந்து விலகுமாறு பணிக்கப்படுவார்.


தாபனவிதிக்கோவையின்படி(E.CODE) அரசியல்உரிமை இல்லாதவர்கள் எந்தத் தேர்தலாயினும் தமது வாக்குகளை அளிக்கின்ற உரிமை உள்ளது. அதைத் தவிர ஏனைய அரசியல்நடவடிக்கைகளில் பங்குபற்ற உரிமைகள் இல்லை. ஓர் ஆசிரியர் தனது கடமைகளை சரிவரச் செய்த பின்னர், திணைக்களத் தலைவரால் மறுக்கப்பட முடியாதவை உரிமைகளாகும். அதற்கப்பால் சில வசதிகள் உள்ளன. அவற்றை சலுகைகள் என்போம்.

No comments:

Post a Comment

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...