Monday, 19 October 2020

பொருளாதார எழுச்சி




கடந்த காலத்தில் மோசமாக வீழ்ச்சி கண்டிருந்த நாட்டின் பொருளாதாரம் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் ஸ்திரநிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகிறது. மக்களை திசைதிருப்பும் விதத்தில் எதிரணித்தரப்பினர் என்னதான் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும் நாடு பொருளாதார ரீதியில் மேலெழுந்து வருவதை மறுக்கமுடியது. பாரிய கடன்சுமைகளுக்கு அரசு முகம்கொடுத்த போதிலும் வீழ்ந்து போயிருந்த பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதில் அரசாங்கம் ஓரளவுக்கேணும் வெற்றிபெற்றே இருக்கின்றது. வளர்முக நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது பொருளாதார வளர்ச்சியில் நாடு படிப்படியாக எழுச்சிபெறுவதை காண முடிகிறது.


பரவலான அபிவிருத்தித் திட்டங்கள். மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் திட்டமிடப்பட்ட வியூகங்களின் அடிப்படையில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சில செயற்பாடுகள் தாமதப்பட்டாலும் கூட பெரும்பாலான திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டே வருகின்றன. அவற்றை பொதுமக்கள் அனுபவிக்கக்கூடியதாகவும் அமையப்பெற்றுள்ளது. சாதாரண மக்களது வருமானம் கூட கணிசமான அளவுக்கு அதிகரித்திருப்பதையும் மறுதலிக்க முடியாது. அரசு வகுத்த திட்டங்கள் சிரமமான முறையில் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.


அரச தரப்பை விமர்சிக்க வேண்டுமென்பதற்காக எதிரணித் தரப்புகள் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி பொதுமக்களை திசைதிருப்பி ஆளும் தரப்புக்கு எதிரானதொரு பிம்பத்தை வெளிக்காட்ட முனைகின்றன. அரசாங்கம் எதனையுமே செய்யவில்லை என்ற மாயையை உருவாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் எதிரணி ஈடுபட்டு வருகின்றது. ஆனால் யதார்த்தத்தை மக்கள் புரிந்தே வைத்துள்ளனர். என்றாலும் குறைபாடுகள் எதுவுமே இல்லை என்று கூற முற்படவில்லை,


பாரிய கடன் சுமைகளுக்கு மத்தியிலும் மக்களால் உணரக்கூடிய பொருளாதார அபிவிருத்தியை காணமுடிகிறது. குறுகிய காலத்துக்குள் கடன் சுமையில் கணிசமான அளவை திருப்பிச் செலுத்தியதோடு நின்றுவிடாமல் நாடு தழுவிய மட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுத்த அரசாங்கம், அரச ஊழியர்களு க்கு சம்பள அதிகரிப்பையும் வழங்கியது. இந்த நிலையிலும் கூட சில தொழிற்சங்கங்கள், அரச ஊழியர்களை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி மக்கள் மத்தியில் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.


கணிசமான அரச வேலைவாய்ப்புகளுடன், தனியார்துறையை ஊக்குவித்து அவற்றினூடாகவும் பெருமளவு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சர்வதேச முதலீட்டாளர்களை ஊக்குவித்து பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை அறிமுகப்படுத்தி பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. உடைந்துபோன உள்ளங்களைக் கூட ஓட்டவைக்கச் செய்வதில் திருப்தி கொள்ளக்கூடியதாகவே உள்ளது.


மக்களின் எதிர்பார்ப்புகள் கணிசமான அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலில் மக்களிடையே ஆசுவாசத்தை ஏற்படுத்தி மக்களது மனங்களை ஈர்த்தெடுப்பதில் அரசு முன்னேற்றம் கண்டுள்ளது. மக்கள் எதிர்பார்த்த நிம்மதியை குறுகிய காலத்துக்குள் கொண்டுவர முடிந்துள்ளது. இருண்ட யுகத்தில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களின் வாழ்வினை ஒளிபெறச்செய்து மக்களின் மனங்கள் வென்றெடுக்கப்பட்டுள்ளன. அச்சுறுத்தல்களிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு அச்சமின்றி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மக்களிடையே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரிய பணியையும்கூட அரசு முன்னெடுத்தது. இனங்களுக்கிடையேயும், மதங்களுக்கிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பயணத்தில் புரிந்துணர்வான ஒரு மைல் கல்லுக்கு வந்த தருணத்தில் தீயசக்திகள் திட்டமிட்டு இனவாதத் தீயை கக்கினர். அதனையும் கூட இந்த அரசு சாதுர்யமாக முறியடித்தது. எதிர்ப்பு அரசியல் என்பது ஜனநாயக அரசியலில் ஒரு அங்கம்தான். ஆனால் அந்த எதிர்ப்பு அரசியல் ஆரோக்கியமானதாக அமைதல் வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும்.


அபிவிருத்தி என்பது நாட்டின் சகல பகுதிகளுக்கும் விரிந்ததாகக் காணப்பட வேண்டுமென்பதில் இந்த அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. தெற்கில் முன்னெடுக்கப்படும் பொருளாதார அபிவிருத்தி வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் சமமாக மேற்கொள்ளப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டியதொன்றாகும். எந்தவொரு பிரதேசத்துக்கும் பாகுபாடு காட்டப்படக்கூடாது. வளங்கள் கூட சரிசமமாக பகிரப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


கடந்த காலத்தில் சகல விடயங்களும் இன ரீதியான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதன் காரணமாக நாடு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. காலத்துக்குக் காலம் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் கூட செல்லாக் காசு போன்ற நிலையிலேயே பார்க்கப்பட்டன. இந்த முரண்பாட்டைத் துடைத்தெறிய வேண்டிய அவசியத்தை 2015ல் அரசு உணர்ந்த நிலையிலேயே சில காத்திரமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் முக்கியமானதுதான் வடக்கு அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பதாக அமைந்துள்ளது.


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பும் அபிவிருத்தியில் பாரியதொரு மைல் கல்லாகும். வடக்கில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது. அந்த மண்ணில் பொருளாதாரப் புரட்சியொன்றுக்கு வித்திடப்பட்டுள்ளது. வடபுலத்து மக்கள் மனங்களில் ஊன்றிப்போயிருந்த விரச நிலை மாறும் யுகமொன்று உதயமாகியுள்ளது. அந்த மக்களது மனங்களிலும் நம்பிக்கை ஒளி பரவத் தொடங்கியுள்ளது. இது ஆரம்பம் மட்டுமே. மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் மிக விரைவில் முழு நாடும் ஒன்றுபட்டு இது எங்கள் நாடு, எங்கள் மண் என்ற ஒத்த நிலைப்பாட்டுக்கு வரக்கூடிய காலம் வெகு தூரத்தில் இல்லை என நம்பலாம்.

No comments:

Post a Comment

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...