Tuesday, 20 October 2020

மனிதரைக் கொல்லும் புகையிலை



இலங்கையில் புகைபிடிப்பதனால், மதுபாவனையால் தினமும் சுமார் 60 பேர் மரணமடைகின்றனர். வருடமொன்றில் இதனால் மரணிப்போரின் எண்ணிக்கை சராசரியாக 20,000 ஆகும். சர்வதேச ரீதியில் வருடாந்தம் சுமார் 60 இலட்சம் பேர் புகைபிடித்தலினால் உயிரிழக்கின்றனர். மேலும் புகைத்தல் காரணமின்றி, ஆனால் புகைபிடிப்பவர்களை சூழவுள்ள இரண்டாம் நிலை புகைத்தல் காரணமாக வருடமொன்றிற்கு 06 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.


அமெரிக்காவில் கி.மு காலப்பகுதியிலேயே புகையிலை பயிரிட ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கர்கள் காயங்களை சுத்தமாக்கும் தொற்றுநீக்கியதாகவும் வலி நிவாரணியாகவும் புகையிலையைப் பயன்படுத்தினர். வட அமெரிக்காவில் பணம் உழைக்கும் பயிராக புகையிலை இருந்துள்ளது.


1847 ஆம் ஆண்டு பிலிப் மொரிஸ் என்பவரே முதன்முதலாக புகையிலையைப் பயன்படுத்தி சிகரெட்டினைத் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். எனினும் சிகரெட் பயன்பாடு என்பது ஆரம்ப காலங்களில் இராணுவ வீரர்களிடமும் பாதுகாப்புப் படையினரிடமே காணப்பட்டது.


1953 களில் சிகரட், புகையிலை பாவனையால் புற்றுநோய் ஏற்படுகின்றது என டாக்டர் எமல் எல் வைன்டஸ் கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து 1964 களில் அமெரிக்க அரசு புகைபிடிப்பதால் சுகாதாரத்திற்கு கேடு என்னும் நோக்கில் சட்டம் உருவாக்கியது.


மனிதனுக்கு மரணத்தைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாம் நிலையிலுள்ளது. இதனாலேயே புகையிலை பாவிப்பு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக உலக சுகாதார அமைப்பு 1987 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதியை உலக புகையிலை எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31 ஆம் திகதியை உலக புகையிலை எதிர்ப்புத் தினமாக ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நாளாக அனுஷ்டித்து வருகின்றன.


புகைத்தல் புகை பிடிப்பவரை விட அச்சூழலில் இருக்கும் ஏனையவர்களையும் அதிகளவு பாதிக்கச் செய்கின்றது. புகைப்பவர்கள் தமது ஆயுட் காலம் முடிவதற்கு முன்பே தமது உயிரினை அழித்துக் கொள்கின்றனர். இதேவேளை தன் உயிரை அழிப்பதற்கே இந்த உலகில் அனுமதி இல்லாத போது தன் சுயநலத்துக்காக அடுத்தவர் உயிர்களின் அழிவுக்கு மற்றவர்கள் காரணமாக இருப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?


புகைத்தல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உலகில் நிமிடத்திற்கு 6 பேர் மரணிப்பதாக சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.


20ம் நூற்றாண்டில் 100 மில்லியன் பேரும் 21ம் நூற்றாண்டில் இதுவரை 1 பில்லியன் பேரும் புகைத்தல் தொடர்பான நோய்களால் இறந்துள்ளனர் எனவும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இது தொடருமானால் 2030ம் ஆண்டு காலப்பகுதியில் 8 மில்லியன் பேர் வரை வருடாந்தம் உலகில் மரணமடையலாம் என எதிர்வு கூறப்படுகிறது.


புகைக்கும் போது வெளிவரும் புகையில் 400 இற்கும் அதிகமான நச்சு இரசாயனப் பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் 50 வீதமானவை சுவாசப் பற்றுநோயினை ஏற்படுத்துபவையாகவுள்ளன. அத்துடன் இப்புகையை சுவாசிக்கும் சிறு குழந்தைகளின் எண்ணங்களில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுத்தப்படுகின்றன என அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் நைட்டிங் ​ெகாம் பல்கலைக்கழகங்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


புகையை சுவாசிப்பதால் இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்ற அதேவேளை நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, உடல் உறுப்புகளில் பாதிப்பு, பல், உதடுகளின் நிறம் மாறுதல், இருமல் என புதுப்புது நோய்கள் புகைப்பவர்களின் உடலினை ஆக்கிரமித்து கொள்கின்றன. இதனால் புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது வாழ்நாளினை வைத்தியசாலைகளிலும் மருந்துகளுடனும் கழிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.


புகையினை உள் இழுக்கும் போது புகையிலுள்ள நிக்கோர்டின் என்னும் இரசாயனப் பொருள் மூளையினைச் சென்றடைகின்றது. ஒவ்வொரு முறையும் இழுக்கும் போதும் அந்த இரசாயனப் பொருள் மூளைக்கு செல்கின்றது. அத்துடன் இந்த இரசாயன நச்சுப் பொருளுடன் 700 வகையான வேறு இரசாயனக் கூட்டுப் பொருட்களும் செல்கின்றன.


மூளையின் மனநிலை மாற்றுக் கலங்களுக்கு நிக்கோர்டின் உட்பட இரசாயனக் கூட்டுப்பொருட்கள் செல்வதால் புகைபிடிப்பவர்களுக்கு ஒரு வகை மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. சில மனஅழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பவர்கள் இந்த மாயையை ஒரு சிறந்த தீர்வாக எண்ணுகின்றனர். எனவே புகைபிடித்தலை ஒரு பழக்கமாக ஏற்றுக்கொள்ள முனைகின்றனர்.


நாடுகளைப் பொறுத்தவரை அநேகமான ஆண்கள் வீடுகளிலோ, அலுவலகங்களிலோ அல்லது பொது இடங்களிலோ ஏற்படும் பிரச்சினைகளுக்கும் அதனால் ஏற்படும் மனஅழுத்தங்களுக்கும் தீர்வாகவே புகைபிடிப்பதாகக் காரணம் சொல்வார்கள். எந்தவொரு பிரச்சினைகளையும் பேசியோ, ஆராய்ந்தோ, சிந்தித்தோ முடிவெடுக்காது புகைபிடித்தலைக் காரணம் சொல்வது ம​ைடமையாகும்.


இலங்கையிலேயே புகைபிடிப்பதற்காக பல காரணங்களை சொல்கின்றனர். மகிழ்ச்சிக்காகவென 22 வீதமானோரும் நண்பர்களுடனும் பொழுது போக்கவென 8.2 வீதமானோரும் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாத காரணத்தினால் 17 வீதமானோரும் தனிமையைப் போக்க 10.5 வீதமானோரும் பரீட்சித்துப் பார்க்கவென 8.7 வீதமானோரும் நண்பர்களின் அழுத்தங்களுக்காக 10 வீதமானோரும் பிரச்சினைகளுக்காக 15 வீதமானோரும் தாங்கள் புகைபிடிப்பதற்கான காரணமாகச் சொல்கின்றனர்.


அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருட்களின் விலையேற்றத்தால் திணறுகின்ற பொதுமக்கள் சிகரெட், சுருட்டு, மது போன்றவற்றின் விலையினை எத்தனை சதவீதத்தினாலும் அரசு உயர்த்தினாலும் எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யாது அதிக பணம் கொடுத்த வாங்கி உபயோகிக்கின்றனர். எனவேதான் அரசு எந்தவித அச்சமோ, தயக்கமோ இன்றி அடிக்கடி இத்தகைய பொருட்களின் விலையினை அதிகரித்து வருகின்றது. இந்த விலையேற்றத்தால் குடும்பப் பெண்களும் குழந்தைகளும் உறவினர்களுமே பாதிக்கப்படுகின்றனர்.


200 குடும்பங்கள் சிகரெட் வாங்க மாதாந்தம் செலவு செய்யும் தொகை 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவாகும். ஒருநாளைக்கு 4101 மில்லியன் சிகரெட்டுகள் விற்கப்படுகின்றன.


இலங்கை மட்டுமல்லாது உலக நாடுகள் பல சிகரெட் விற்பனை மூலமே அதிகளவு வருமான வரியினை ஈட்டுகின்றன. இலங்கை அரசு சிகரெட் மூலம் 12 வீத வருமானத்தினைப் பெற்று வருகின்றது. புகைபிடிப்பதற்காக 5800 கோடி ரூபாவினை வருடமொன்றுக்கு மக்கள் செலவிடுகின்றனர்.


அதேவேளை புகை தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க சுகாதார அமைச்சு 22 வீதம் செலவிடுகின்றது. புகைபிடிப்பவர்களில் 60 பேர் உயிரிழக்கின்ற அதேவேளை 60 பேர் புதிதாக புகைபிடிக்கப் பழகுகின்றனர்.


புகைபிடித்தலை ஊக்குவிக்கும் பிரித்தானியா, அமெரிக்கா புகையிலை கம்பனிகள் கோடி கோடியாக அமைதியாக இருந்து கொண்டு இலாபம் உழைக்கின்றன. ஆனால்,இவற்றினை உணராத வறிய, சாதாரண குடும்பத்தவர்கள் அற்ப மகிழ்ச்சிக்காக அவர்களுடைய உடலையும் கெடுத்து குடும்ப மகிழ்ச்சியையும் சீரழித்து பணத்தினையும் விரயம் செய்து கொண்டிருக்கின்றனர்.


2010 ஆம் ஆண்டு வடகிழக்கில் மட்டும் 5.1 பில்லியன் ரூபாவை அரசு புகையிலைப் பொருட்கள் மூலமாக வருமானமாகப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...