Tuesday, 20 October 2020

வறட்சி




வறட்சி என்பது ஓர் இடத்தில் ஒரு பருவத்தில் பெய்யும் சராசரி மழை அளவானது குறையும் போது ஏற்படுகிறது. இது மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ நீடிக்கலாம்.


வறட்சியை நீக்குவதற்கு தேவையான மழைப் பொழிவு ஒன்றே தீர்வு என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் வறட்சியை வெல்லலாம். வறட்சியின் காரணமாக நாட்டின் பயிர்செய்கை, பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன.


சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் 400 வருடங்களாக நீடித்த வறட்சி ஏற்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.


வறட்சியை அதன் பாதிப்பு மற்றும் கால அளவினைப் பொறுத்து நான்காகப் பிரிக்கலாம். அவை


1. வானிலை சார் வறட்சி


2. விவசாய வறட்சி


3. நீரியியல் சார் வறட்சி


4. சமூக பொருளாதார வறட்சி ஆகும்.


வழக்கமான மழைக் காலத்தில் பெய்யும் மழை அளவானது, சராசரி மழை அளவை விடக்குறையும் போது வானிலை சார் வறட்சி ஏற்படுகிறது. இதுவே மற்ற வறட்சிகளுக்கும் முக்கிய காரணியாகும்.


விவசாய வறட்சியில் பயிர் வளர்ச்சி குறைந்துவிடும். அதாவது மண்ணிலுள்ள நீரின் அளவு குறைந்து பயிர் பாதிப்படைந்து விவசாய உற்பத்தி குறைந்து விடும்.


மழையின் அளவானது குறைந்து விடுவதால், வறட்சியான கால நிலை தொடர்ந்து ஆறுகள், குளங்கள், ஓடைகள், ஏரிகள் முதலிய நீர்நிலைகள் வற்றிப் போவது நீரியியல் சார் வறட்சி ஆகும்.


தொடர்ந்த வறட்சியால் உற்பத்தி பாதிக்கப்பட்டு பொருளாதார பின்னடைவு ஏற்படுதலே சமூக பொருளாதார வறட்சி ஆகும்.


வறட்சியின் விளைவால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. விவசாயம் குறைவதால் பஞ்சம் ஏற்படும். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்வது ஏற்படும்.


வறட்சியின் காரணமாக வெப்பநிலை அதிகரித்து உயிரினங்களுக்கு வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் உண்டாகும். நீர் மற்றும் நிலவாழ் விலங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உயிர் சூழ்நிலையில் மாற்றங்கள் உருவாகும்.


குறைந்த மழைப்பொழிவினால் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படும். வறட்சியினால் தொழிற் உற்பத்தி பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். உணவு மற்றும் தண்ணீருக்குச் சண்டையிடும் சூழ்நிலை உருவாகும். மழை குறைவதால் மண்வளம் குறையும்.


2050ஆம் ஆண்டினை நெருங்கும் போது வறட்சியின் பாதிப்பால் மட்டுமே தெற்காசிய நாடுகளின் விளைச்சல் 30% வரை பாதிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது

.

இலங்கையில் 2005 ஆம் ஆண்டின்  13ம் இலக்க அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின்படி அடையாளம்  காணப்பட்ட 21அனர்த்தங்களுள் வறட்சியும்ஒன்றாகும்.


வறட்சிக்கான காரணங்கள்


மழை பொய்த்துப் போவது, நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி காலியாக்குவது, நீர்த்தேக்கங்களில் நீரின்மை, தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை பயிர் செய்வது போன்றவையே  வறட்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாகும்.


இவைமட்டுமின்றி, நீர்ப்பிடிப்புத் தன்மை குறைந்த மண் வகைகளும் வறட்சியை அதிகரிக்கின்றன. . பல மாவட்டங்களில் பரவலாகக் காணப்படும் செம்மண் நிலங்களின் நீர்ப்பிடிப்புத் திறனும் குறைவுதான். இப்படியாக மண்வகையும் வறட்சிக்கு முக்கிய காரணமாகும்.


வறட்சியை வெல்வது எப்படி?


வறட்சியால் நமது நாடு அடிக்கடி பாதிக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வது அவசியமாகிறது. வறட்சியானது ஓர் இயற்கை இன்னல் என்பதால் அதனை தடுக்க முடியாது. ஆனால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பாதிப்பிலிருந்து தப்பலாம்.


வறட்சியானது விவசாயிகளைத் தான் அதிகம் பாதிக்கும். எனவே வறட்சி பாதிப்பிலிருந்து காத்துக் கொள்வதற்கு சரியான வழி, வறட்சியைத் தாங்கும் பயிர்களை பயிரிடுவதுதான் செய்வது தான்.

வறட்சியைத் தாங்கும் நெல் ரகங்களைத் தேர்வு செய்து பயிர் செய்யலாம்.


நீர்நிலைகளை சீர்செய்து மழைநீரைத் தேக்குதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்தல், பயன்படுத்திய நீரினை மறு சுழற்சி செய்து பயன்படுத்துதல், உள்நாட்டில் உள்ள அதிக நீர்வளமுள்ள நதியினை நீர்வளம் குறைவாக உள்ள நதியுடன் இணைத்தல் வறட்சியைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வறட்சியை வெல்லலாம்.

No comments:

Post a Comment

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...