Tuesday, 3 November 2020

ஆசிரியர் தினம்

 


அறிவொளி ஊட்டும் நல் ஆசானே

----------------------------------------------------------

அகிலம் அறிவைக் கௌரவிக்குமுகமாக ஆசிரியர்களையே கௌரவிக்க எண்ணியது. அதன் பலனே வருடா வருடம் ஒக்டோபர் 06 ஐ உலக ஆசிரியர் தினமாகப் பிரகடனம் செய்து கொண்டாடி மகிழ்கிறது. ஆசிரியர் கொண்டாடப் படுவதும், ஆசிக்கப் படுவதும் அறிவைக் கொண்டாடுவதற்கு ஒப்பான தார்மீகப் பணியே எனலாம். ஏனெனில் உலகில் அறிவுத் தொழில் (knowledge works) செய்யும் உன்னத பாக்கியம் பெற்றவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே.


கிரேக்க வரலாற்றில் பல சமூக மாற்றங்களும், பல் துறைசார் முன்னேற்றங்களும் ஏற்பட ஆசிரியர்களே காரணமாக இருத்தார்கள். எல்லா கல்வி வல்லுனர்களும் ஆசிரியராகவே வாழ்ந்தார்கள். (Living as teacher) ஆசிரியர் சோக்ரடீஸ், அவர் மாணவன் பிளேட்டோ, அவர் மாணவன் அரிஸ்டோட்டில் என ஆசிரியர்களாக உருவானார்கள். உலகை ஆண்ட மகா அலக்சாந்தரை உருவாக்கியவர் அரிஸ்டோட்டில் என்ற மிகப் பெரும் ஆசான் தான்.

இவர்களை உலகம் இன்னும் நினைவு கூரக் காரணமே ஆசிரியம் எனும் மகத்துவமான பணியே தான்.


உலகில் நிகழும், நிகழ்த்தப்படும் மாற்றங்கள், வியப்புகள் அத்தனையும் நிகழ்த்தப்படுவது எங்கோ ஒரு மூலையில் தன்னலம் கருதாமல் ஓர் ஆசானால் உருவாக்கப்பட்ட அந்த மாணவச் சமூகத்தினால் தான் என்பதை வைத்தே அதனை ஒரு தினத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது என்பது எமது வாதம். உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு ஜீவனுக்கும் பின்னால் ஓர் ஆசான் இருக்கிறான் என்பதே யதார்த்தமாகும்.


ஒரு சமூகம் அதி உன்னத நிலை அடைந்து இருந்தால் நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால் ஆசிரியர் சமூகம் தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை, அல்லது ஆசிரியர்கள் சரியாக சமூகத்தால் கணிக்கப்பட வில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புக்களும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது ஆசிரியமே (pedagogy). காரணம் அறிவு, திறன், மனப்பாங்கு என்ற மனித உருவாக்கப் பணியைச் செய்வது ஆசிரியர்களே.


மாணவர்களைப் பெற்றோர் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கிறார்கள். ஆசிரியர் அந்த மாணவனுக்கு இந்த வியாபித்த உலகத்தையே ஒப்படைக்கிறார். அவனைக் கண்களைத் திறந்து சரியானதைப் பார்க்கும் திறனை உடையவனாக ஆசிரியரே உருவாக்குகிறார்.

ஒரு மாணவன் ஆசிரியரிடம் வரும் தருணத்தில் வெறும் களி மண் குவளையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது. தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்க முடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும்.


யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத் தப்பட்ட ஆசிரியர் தினம் 1994 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதி முதல் தடவையாக இலங்கையில் கொண் டாடப்பட்டது. சமூகத்தின் ஏணிகளாகவும் தோணிக ளாகவும் இருந்து வழியேற்பட பாலங்களாய் அமைந்துள்ள ஆசிரியர்களது பல்வேறு பிரச்சினைகளும் ஆராயப்பட வேண்டிய நாள் இன்றாகும்.

ஆசிரியம் ஒரு தொழிலல்ல (Job). அது ஒரு சமூகப் பணிப் பண்பு கொண்ட ஒரு தொழின்மை (Missionary) ஆகும். வீட்டில் ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியராக தன் பிள்ளைக்கு வழி காட்டுகின்றனர். ஆனால் பாடசாலையிலே ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோராக மாறி வழி நடாத்துகின்றனர். ஆசிரியர்கள் மென்மை (Softness), கவனிப்பு (Care), அன்பு (Love), மனோதிடம் (Mental Strength), நம்பிக்கை (Confidence) ஆகிய கொடைகளை மாணவர்க்கு வழங்குகின்றனர்.


ஆசிரியர்கள் தொழிலில் கொண்டிருக்க வேண்டிய அடிப்படையான மனப்பாங்குகளைப் பின்வருமாறு கூறலாம். 


1) தொழின்மைசார் திருப்தி (Professional Satisfaction).


2) கற்பித்தலில் ஆர்வம் (Teaching Enthusiasm).


3) சேவை மனப்பாங்கு (Non Profits)


4) பேரார்வம் (Passion)


5) நேர்மைய சிந்தனை (Positive Thinking)


6) இற்றையோடு இணைந்திருத்தல் (Updates)


ஆசிரியத் தொழில் எவ்வாறு அமைய வேண்டும் என அதன் ஆங்கில எழுத்துக்களின் ஊடகவும் விளக்க முடியும். ஆசிரியம் எவ்வாறான தன்மைகளை தன்னில் கொண்டிருக்க வேண்டும் என்ற விடயத்தினை Teacher என்ற ஆங்கிலப் பதமானது உணர்த்தி நிற்பதனை நாம் காணலாம்.


T - Training  - பயிற்சி


E - Education  - கல்வி


A - Ability - திறமை


C - Creativity - படைப்புத் திறன்


H - Humansim - மனிதம்


E - Efficiency  - வினைத்திறன்


R - Reformer  - சீர்திருத்தவாதி


ஆகவே ஆசிரிய சீர்திருத்தவாதிகளான நாம் எமது பிள்ளைகளாக எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களை கருதுவோம். அவர்களுக்கு தமது பெறுமதியினை உணரச் செய்வோம். நாளைய உலகின் தலையெழுத்துக்களை தீர்மானிப்பவர்கள் நீங்கள் தான் என்பதை உணரச் செய்வோம். அதற்காக அவர்களை தயார் செய்வோம். 


உலகளாவிய குழந்தை உரிமைச் சட்டங்கள், ஊடகங்களின் பிரமாண்டமான வளர்ச்சி, மனித உரிமை மீறல் குறித்த பொது அக்கறை இவற்றின் விளைவாகவே கல்வியில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டி உள்ளது. ஆசிரியராக ஒருவர் தனது பணியைத் தக்க வைக்க தனது துறை அல்லது பாடத்தில் சிறந்த அறிவைப் பெற்றிருந்தால் மட்டுமே போதாது. அவருக்கு வகுப்பறை உளவியல் தேவை, நேரிடை நடத்தை பாறிகள் பற்றிய அறிவு (Positive Discipline), ஆசிரியர்- மாணவர் உறவு குறித்த உளவியல், மாணவர்கள் ஒழுங்கு மீறி ஏன் நடக்கிறார்கள் தடுக்கும் உத்திகள் சார் அறிவு ஆசிரியர்க்கு இன்றியமையாதவை.


மாணவர் கல்வியோடு பெற்றோர், சமுதாயம், கல்வி அதிகாரிகள் என்பன தொடர்பு பட்டாலும் ஆசிரியரே மிகவும் நெருங்கிய தொடர்பாளராக (Communicator) உள்ளார். ஆசிரியர் சிறந்த தயார்படுத்தலோடும், கல்வித் தொழிநுட்பத் திறனோடும், குறித்த பாடம் தொடர்பான அறிவுடன் பாடத்தைக் கற்க உள்ள ஒவ்வொரு மாணவன் தொடர்பாகவும் நன்கு தெரிந்து கொண்டு வகுப்பறைகளுக்குள் நுளையும் போதே மாணவன் உலகின் வியாபிப்பை அறிந்து கொள்கிறான். கல்வியின் சரியான இலக்கை அடைய வழி பிறக்கிறது.


ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்

----------------------------------------------------

1) பதவி ரீதியான பிரச்சினைகள்

2) சம்பள முரண்பாடுகள்

3) இடமாற்ற பிரச்சினைகள்

4) அரசியல் தலையீடுகள்

5) பயிற்சி, நிருவாக முரண்பாடுகள்

6) தொழில்ரீதியான மனழுத்தம் (Stresses)

7) தொழிற் சங்கப் பிரச்சினைகள்


ஆசிரியர் தினமான இன்று முதல் அரசும், கல்வித் துறை நிருவாகமும் ஆசிரியர் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து அவர்களை மீட்பதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும். ஆசிரியரைக் கௌரவிக்கும் சிறந்த முறைமைகள் உருவாக்கப் பட வேண்டும், ஆசிரியர்களின் சேம நலன் (Welfare) அதிகரிக்கப் பட வேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுபளைப் போன்று ஆசிரியம் மேலோங்க வேண்டும்.


உலகில் இன்று மக்கள் நலன், சேவை மனப்பாங்கு என்ற நிலை நடைமுறையில் தூர்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. அதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. முக்கியமாக முதலாளித்துவ யுகமே அதற்கான காரணியாக உள்ளது. பண மோகம் எதையுமே விட்டு வைக்க வில்லை. அது ஆசிரியர் சமூகத்தையும் பீடித்தே வருகிறது. பணத்தை நோக்கி ஓடும் பல ஆசிரியர்கள் இன்று உருவாகி விட்டதால் தனியார் கல்வி, (Tuition) , பகுதிநேரத் தொழில்களைச் செய்து கொண்டு (Side Business) ஆசிரியப் பணி புரிதல், அரசியல்வாதிகளோடு ஒட்டிக் கொண்டு ஆசிரியப் பணி பிரிதல் என்பன குறித்த தொழிலின் மகத்துவத்தைச் சிதைத்து வருகின்றன. அவர்களால் தொழிலில் முழுக் கவனம் செலுத்தக் கூடிய சம்பளமும் பெற முடியாதிருக்கிறது. 


பல சிறந்த நல்ல ஆசிரியர்கள் இன்றும் உள்ளார்கள். பணியை அர்ப்பணத்தோடு செய்து வருகிறார்கள். பல சவால்களுக்கு அவர்கள் இலக்காகிக் கொண்டு பொறுமையோடு மாணாக்கருக்காக உழைக்கும் அவர்களை சமூகம் என்றும் கௌரவித்தே வருகிறது.


சமூகம் ஒரு பாடசாலையின் முழுப் பொறுப்பையும் ஆசிரியர் சமூகத்தின் மீது சுமத்தி விட்டு பெறுபேற்றை எதிர்பார்க்காது பாடசாலைக்கும், ஆசிரியர்க்கும் உதவிக் கரம் நீட்ட முன்வர வேண்டும். ஆசிரியர்களோடு சுமுகமான பரஸ்பர உறவைப் பேணும் நிலை வேண்டும். ஆசிரியர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று மதிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்காகப் பேசும் சமூகக் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும். ஆசிரியர் நலன் வேண்டிய பிரார்த்தனைகள் சமூகத் தளத்திலிருந்து ஒலிக்க வேண்டும். நல்லாசான்கள் மனத் தாக்கத்துக்கு உட்படும் போது சமூகம் ஆசிரியர்களுக்கு எதிரான உரிய அதிகாரத் துஷ்ப்பிரயோகத்திற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும்.

No comments:

Post a Comment

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...