பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!
வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை உருவாக்கலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுசார் உலகத்தைப் புரிந்து, அதனோடு சேர்ந்து போகலாம். தற்கால இலக்கியப் போக்குகளை அறிந்து ரசிக்கவும், சிறந்த நவீன இலக்கியங்களைப் படைக்கவும் வாசிப்பு மிகவும் அவசியம்.
பண்டைக் காலத்தில் தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் சங்கம் வளர்த்து பாதுகாத்தவர்கள் தமிழர்கள். இலங்கையில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்ப் பணியை எம்மவர்கள் திறம்படச் செய்து கொண்டிருக்கின்றனர். தமிழ்மொழியைப் பொறுத்தவரை நிறைய நூல்கள் வெளிவருகின்றன. அவையெல்லாம் தரமானவையா என்றகேள்வி எழுகின்றது.
காலத்தைக் கடந்த இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். அது எமது நாட்டு எழுத்தாளர்களினாலும் எதிர்கால சமுதாயத்தாலும் நிச்சயம் முடியும். இப்பொழுது ஊடகங்களும் எழுதுபவர்களும் தமிழ்மொழியை சரியாக எழுதவோ உச்சரிக்கவோ தெரியாதவர்களாக இருக்கின்றனர். சரியென்று எண்ணிக் கொண்டு தவறான சொற்பிரயோகங்களை பிரயோகிக்கின்றனர். இதற்குக் காரணம் தமிழ்மொழிப் பயிற்ச்சி மக்களிடையே மிகக் குறைவாக இருப்பதும் ஆங்கிலமொழியின் மோகமாகவும் இருக்கலாம்.
எல்லோரும் நூல் வெளியிடுவது போல் நாமும் வெளியிட வேண்டும் என நினைக்கக் கூடாது. தரமான நூல்களைப் படைக்க வேண்டும். ஒரு நூலை வெளியிட்டாலும் அது இலக்கிய உலகில் அதிர்வையும் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும். இப்பொழுது தாங்கள் எழுதுகின்ற கவிதைகள் எல்லாம் கவிதைகள்தானா, கதைகள் எல்லாம் கதைகள் தானா என்று தெரியாமல் பணம் இருந்தால் நூல் வெளியிடலாம் என்னும் நிலைமை இன்று இருக்கின்றது. எல்லோரும் நூல் வெளியிடலாம். முதலில் அவர்கள் தமிழ்மொழியில் பயிற்சி பெற வேண்டும். மொழிப் பயிற்சி மிக முக்கியமானது. தமிழ்மொழியில் சரிவர எழுத வேண்டும். மூத்தமொழியை, வளமான மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் தமிழர்கள் அம்மொழியை மேலும் வளர்ப்பதற்கு தங்களாலான முயற்சியைச் செய்ய வேண்டும்.
முன்பு இலங்கைத் தமிழ் அறிஞர்கள் இந்தியாவிற்குச் சென்று இந்திய அறிஞர்களுக்குக் கூட தமிழ் கற்பித்திருக்கின்றார்கள். அவர்களில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் குறிப்பிடத்தக்கவர். தாய்மொழியின் பெருமையை ஒவ்வொருவரும் கட்டிக் காக்க வேண்டும்.
இளம் சந்ததியைப் பொறுத்தவரை வாசிப்புப் பழக்கம் வெகுவாக இப்போது குறைந்து விட்டது. அவர்களிடம் மட்டுமல்ல எல்லோரிடமும் குறைந்து விட்டது. தமிழ் மொழியை பல்கலைக்கழகம் சென்றுதான் கற்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நூல்களை வாசிக்கப் பழகிக் கொண்டால் தமிழ்மொழி கைவரப் பெறும். எவ்வளவுக்கு வாசிக்கின்றோமோ அவ்வளவிற்கு மொழியின் வளம் பெருகும். பிள்ளைகளின் வாசிப்பு பழக்கத்தை பெற்றோர் தூண்ட வேண்டும்.
தரமான படைப்புகள் மக்கள் மத்தியில் என்றும் பேசப்படும். சமூகத்தோடு ஒன்றித்து எழுத வேண்டும். இன்று நவீன சாதனங்களின் வருகையினால் வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது. குறிப்பாக இளம் பிள்ளைகளின் நேரத்தை கைத்தொலைபேசிகள் ஆக்கிரமித்துள்ளன. இதில் தேவையில்லாத விடயங்களை தேடி தமது எதிர்காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர். பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு மறைமுகமாக பெற்றோர்களே காரணமாக இருக்கின்றனர். பிள்ளை வளர்ப்பு என்பது அடுத்த சந்ததிக்கு ஒரு சவாலாக இருக்கப் போகிறது.தமிழ் எழுத்தாளர்கள் சத்தமில்லாது பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களது எழுத்துப் பணிகள், இலக்கியப் பணிகள் ஊடகங்களில் அதிகமாக வெளிவருவது குறைவாகவேயுள்ளது. சிலர் பேரளவில் நூல் ஒன்றை வெளியிட்டு ஒரு கடை முதலாளிக்கு அல்லது அரசியல்வாதிக்கு முதற்பிரதியை வழங்குகின்றனர். வாசிப்போடு, எழுத்தோடு தொடர்பில்லாத ஒருவருக்கு நூல் ஒன்றை வழங்குவதால் எவ்வித பிரயோசனமுமில்லை. எழுதப்படுகின்ற எமது நூலகள் வாசிக்கப்ப டவேண்டும். அதுவே ஒரு எழுத்தாளனுக்கு ஆத்ம திருப்தியைக்கொடுக்கும். முன்பு இலங்கைத் தமிழ்
அறிஞர்கள் இந்தியாவிற்குச் சென்று இந்திய அறிஞர்களுக்குக் கூட தமிழ் கற்பித்திருக்கின்றார்கள்.
அவர்களில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் குறிப்பிடத்தக்கவர்.